தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் வருகிற 22-ம் தேதி முதல் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை நடக்கிறது. இதில் திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். இவர்களின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அணியின் உரிமையாளரான வி.பி.சந்திரசேகர் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் முரளிதரன் கூறும்போது, ’இந்த தொடர் இளம் வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பு. இதில் சிறப்பாக செயல்பட்டால் ஐ.பி.எல். மற்றும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. ஐ.பி.எல். போட்டி தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரும்பி இருப்பது மகிழ்ச்சி. அந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக வாய்ப்பிருக்கிறதா என்று கேட்கிறார்கள். நான் சன் ரைசர் அணியின் பயிற்சியாளராக இருப்பதால் இப்போது வாய்ப்பில்லை. இலங்கை அணியுடன் நடக்கும் தொடரில் இந்திய அணியின் அஸ்வின், ஜடேஜா சிறப்பாக பந்துவீசுவார்கள் என்று நம்புகிறேன். 2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணி, இந்தியாவிடம் தோல்வி கண்ட ஆட்டத்தில் மேட்ச் பிக்சிங் நடந்து இருக்கலாம் என்று ரணதுங்கா சொல்லி இருப்பது பற்றிய விவகாரத்துக்குள் செல்ல விரும்பவில்லை’ என்றார்.