டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைவான போட்டிகளில் 300 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.
ரவிச்சந்திர அஸ்வின் இந்திய அணியில் தவிர்க்க முடியாத சூழற்பந்து வீச்சாளர். 3 வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணிக்கு அஸ்வின் சிறப்பான பங்காற்றி வருகிறார். வலக்கை சுழற்பந்து வீச்சாளரான இவர் எதிரணி வீரர்களுக்கு கடுமையான சவால் அளிக்கக்கூடிய பந்துவீச்சாளர். இவரின் கேரம் பவுலிங் மிகவும் பிரபலமானது.
நாக்பூரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களை வீழ்த்தினார். இன்று நடைபெற்ற 3ஆம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணியின் கடைசி விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தியபோது, அவர் 300 விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார். இதன்மூலம் குறைந்த போட்டியில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற மைல்கல் சாதனையை இந்திய வீரர் அஸ்வின் எட்டினார்.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் தனது 54வது டெஸ்ட் போட்டியில் 300வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டெனிஸ் லில்லி 56 போட்டிகளில் 300 விக்கெட்களை கைப்பற்றியதே சாதனையாக இருந்தது.இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.