இலங்கைக்கு எதிரான டி20 தொடரில், இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சேர்க்கப்பட்டது தனக்கு வியப்பாக உள்ளது என்று இந்திய அணியின் முனனாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த டி20 தொடரின் முதல் போட்டியில், காயம் காரணமாக சூர்யகுமார் யாதவ், தீபக் சாஹர், கேஎல் ராகுல், ருதுராஜ் ஆகிய வீரர்கள் விலகியநிலையில், ஜடேஜா மற்றும் பும்ரா ஆகிய 2 மூத்த வீரர்களும் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், பும்ரா டி20 தொடரில் ஆடுவது வியப்பாக இருப்பதாக முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள ஆஷிஷ் நெஹ்ரா, “இலங்கைக்கு எதிரான இந்த மூன்று டி20 போட்டிகளில் பும்ரா விளையாடுவது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. எந்த வீரருமேவிளையாட வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் டி20தொடரைத் தொடர்ந்து, இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. இன்னும் நிறையப் போட்டிகள் வர உள்ளன. நமக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதனால், நம்பிக்கை ஏற்பட மற்ற பந்து வீச்சாளர்களுக்கும் வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்.
பும்ரா அணிக்குள் வந்ததால் புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், ஆவேஷ் கான் ஆகியோரில் ஒருவருக்கு ஆட வாய்ப்பு கிடைக்காது. இதனால்தான் பும்ரா ஆடுவது எனக்கு ஆச்சரியமாக உள்ளது” என்று ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டி, லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில், இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. இந்தப் போட்டியில், பும்ரா வீசிய 3 ஓவர்களில், 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.