இந்திய கிரிக்கெட் வீரர்களிடையே பீதியை கிளப்பி வருகிறது யோ-யோ டெஸ்ட். இதில் வென்றால்தான் அணியில் இடம் பிடிக்க முடியும் என்ற நிலை. டாப் பேட்ஸ்மேன்களான யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோர் இந்த தகுதி சோதனையில் வெற்றி பெற முடியாததால் அணியில் இடம் கிடைக்காமல் உள்ளனர். ’அப்படி என்னய்யா அந்த டெஸ்ட்?’ என்று கிரிக்கெட் ரசிகர்களும் கேட்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், யோ-யோ டெஸ்ட் என்ன என்று விளக்கம் அளித்திருக்கிறார் நெஹ்ரா.
இந்தியா- இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை வர்ணனை செய்த நெஹ்ராவிடம் வீரேந்திர சேவாக், அந்த டெஸ்ட் பற்றி கேட்டார். அப்போது நெஹ்ரா கூறும்போது, ‘2001-2002 -ம் ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் அணி நடத்திய பிளிப் டெஸ்ட் போன்றதுதான் இதுவும். அதாவது 20 மீட்டர் தூரத்தை, குறிப்பிட்ட நேரத்துக்குள் அவர்கள் வைத்திருக்கிற புள்ளிக்குள் சென்று திரும்ப வேண்டும். அதற்கு இந்திய அணி 16.1 என்ற புள்ளியை நிர்ணயித்துள்ளது. இதற்கு மேல் எடுப்பவர்கள், இந்த தகுதி தேர்வில் வென்றவர்கள். இந்தப் புள்ளி, விரைவில் 16.5 ஆக மாற்றப்பட இருக்கிறது. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் 18 என இந்த புள்ளியை வைத்திருக்கிறது. அதனால் வீரர்கள் வேகமாக ஓடப்பழக வேண்டும். ஹர்திக் பாண்ட்யா 19 புள்ளிகளும், நான் 18.5 புள்ளிகளும், மணீஷ் பாண்டே 19 புள்ளிகளும் எடுத்தோம். எனக்கு இது எளிதாக இருந்தது. ஏனென்றால் நான் பந்துவீச்சாளர். அதோடு எனக்கு ஓடுவது பிடிக்கும். யுவராஜ் சிங் போன்ற வீரர்களுக்கு இந்த டெஸ்ட் கடினமாக இருக்கிறது . விராத் கோலி எத்தனை புள்ளிகள் எடுத்தார் என்பது எனக்கு தெரியாது’ என்றார்.