விளையாட்டுத்துறைகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் உரிய விருதான அர்ஜூனா விருது, இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மற்றும் தமிழக செஸ் வீராங்கனை உள்ளிட்ட 26 விளையாட்டு வீரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி நடந்து முடிந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். வெறும் 7 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்த முகமது ஷமி 10 பவுலிங் சராசரியுடன் 24 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இதில் இரண்டு 5 விக்கெட்டுகளும், ஒரு 7 விக்கெட்டுகளும் அடக்கம். நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 57 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த முகமது ஷமி, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இந்திய பந்துவீச்சாளர் பதிவுசெய்த சிறந்த பந்துவீச்சை பதிவுசெய்தார். மேலும் உலகக்கோப்பையில் ஒரு இந்திய பவுலரால் பதிவுசெய்யப்பட்ட சிறந்த பந்துவீச்சும் அதுவாகும்.
இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையில் முகமது ஷமியின் சிறந்த கிரிக்கெட்டுக்கு மதிப்பளிக்கும் வகையில், விளையாட்டுத்துறையின் இரண்டாவது உயரிய விருதான அர்ஜூனா விருதை அறிவித்து மத்திய அரசு கௌரவித்துள்ளது.
சமீபத்தில் தமிழகத்தை சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி செஸ் துறையில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருந்தார். இதன்மூலம் தமிழகத்திலிருந்து கிராண்ட்மாஸ்டர் பட்டம் முதல் பெண் என்ற பெருமையையும் வைஷாலி தன்வசம் ஆக்கினார்.
இந்நிலையில் தான் வைஷாலிக்கு அர்ஜூனா விருதை அறிவித்துள்ளது மத்திய அரசு. கடந்தாண்டு அவருடைய சகோதரன் பிரக்ஞானந்தா அர்ஜூனா விருது பெற்றநிலையில், தற்போது வைஷாலியின் உயரிய விருதை பெறவிருக்கிறார். அதோடு தமிழக செஸ் பயிற்சியாளர் கிராண்ட்மாஸ்டர் ஆர். பி.ரமேஷ்க்கு துரோணாச்சார்யா விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.