ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 131 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்பராஸ் அகமது யாரும் எதிர்பாராதவிதமாக பந்துவீச்சில் ஈடுபட்டார். இதற்கு, இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனியும் இதேபோல் பந்துவீச்சில் ஈடுபட்டுள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் சர்ஃபராஸ் இரண்டு ஓவர்களை வீசினார். அவருக்கு பதிலாக பஹர் ஜமான் கீப்பிங் செய்தார். 48 மற்றும் 50வது ஓவரை வீசிய சர்ஃபராஸ் மொத்தம் 16 ரன்கள் விட்டுக் கொடுத்தார். பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற்றது உறுதி ஆகிவிட்ட நிலையில் சர்ஃபராஸ் பந்துவீச ஆசைப்பட்டுள்ளார். ஆனால், தோனியைப் போல் அவரால் விக்கெட் எடுக்க முடியவில்லை.
2009ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் போது தோனி முதன் முதலாக பந்து வீசினார். அதில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அந்தப் போட்டியில், தோனி வீசிய முதல் பந்திலே பவுண்டரி அடிக்கப்பட்டாலும், இரண்டாவது பந்திலே விக்கெட் வீழ்த்தினார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தோனி மொத்தம் 6 ஓவர்கள் வீசி 31 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார்.
இதனிடையே, தோனியை காப்பி அடித்து சர்ஃபராஸ் பந்து வீசியதாக இந்திய ரசிகர்கள் இதனை ட்ரோல் செய்தனர். சர்ஃபராஸ் பந்துவீசியதை பாகிஸ்தான் ரசிகர்களும் ட்ரோல் செய்தனர்.