ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதம் விளாசி புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். முன்னதாக 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் தேதி வங்கதேசம் அணிக்கெதிராக கோலி தனது 70வது சதத்தை விளாசியிருந்தார். பின்னர் தற்போதுதான் 1021 நாட்களுக்கு பின் தனது 71வது சதத்தை எட்டிப் பிடித்து சாதனை படைத்துள்ளார் கோலி.
இந்த சதத்தை எட்டிப்பிடிக்க தனது காதல் மனைவி அனுஷ்காவே காரணம் என கோலி உணர்ச்சி பெருக்கில் தெரிவித்தார். “கடந்த இரண்டரை ஆண்டுகள் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளன. இன்னும் ஒரு மாதத்தில் நான் 34 வயதை எட்டப் போகிறேன். அந்த கோபமான கொண்டாட்டங்கள் கடந்த காலத்தின் ஒரு பகுதி. உண்மையில் நான் அதிர்ச்சியடைந்தேன். இது நான் நினைத்த கடைசி வடிவம். ஆனால் செய்வதற்கு என் கண் முன் நிறைய விஷயங்கள் குவிந்திருந்தன. எனது அணி எனக்கு மிகவும் உதவிகரமாக திகழ்ந்தது.
அணிக்கு வெளியே (களத்திற்கு வெளியே) நிறைய விஷயங்கள் நடப்பது எனக்கு தெரியும். சதம் விளாசியவுடன் எனது மோதிரத்திற்கு முத்தமிட்டேன். எனக்கான விஷயங்களை பார்த்துப்பார்த்து செய்த ஒருவரால் தான் நான் இன்று இங்கு நின்று கொண்டிருக்கிறேன். அவர்தான் அனுஷ்கா! இந்த சதம் அவளுக்காகவும் எங்கள் அன்பு மகள் வாமிகாவுக்காவும்தான்!
அனுஷ்காவைப் போல உங்கள் முன்னேற்றத்திற்கான விஷயங்களை முன்வைத்து உரையாட ஒருவர் இருக்கும்போது நீங்கள் விரக்தி அடைய தேவையில்லை. நான் அணிக்கு ஓர் இடைவெளிக்கு பின் திரும்பி வந்தபோது மிகவும் புத்துணர்ச்சியாக உணர்ந்தேன். அப்போது தான் எனக்கே தெரிந்தது. நான் எவ்வளவு சோர்வாக இருந்து இருக்கிறேன் என்று! விளையாட்டு சோர்வை எப்போதும் அனுமதிக்காது. இந்த இடைவெளி என்னை விளையாட்டை அனுபவிக்க அனுமதித்துள்ளது.” என்று கோலி குறிப்பிட்டார்.