‘பங்களாதேஷ் வீரர்கள் மீது நடவடிக்கை வேண்டும்’ : ‘யு19’ இந்திய அணி மேலாளர் ஐசிசி-க்கு வலியுறுத்தல்

‘பங்களாதேஷ் வீரர்கள் மீது நடவடிக்கை வேண்டும்’ : ‘யு19’ இந்திய அணி மேலாளர் ஐசிசி-க்கு வலியுறுத்தல்
‘பங்களாதேஷ் வீரர்கள் மீது நடவடிக்கை வேண்டும்’ : ‘யு19’ இந்திய அணி மேலாளர் ஐசிசி-க்கு வலியுறுத்தல்
Published on

யு19 (19 வயதுக்குட்பட்டோருக்கான) கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் வெற்றிக்குப் பின்னர் பங்களாதேஷ் வீரர்கள் நடந்துகொண்ட விதத்திற்கு ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அணி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விறுவிறுப்பாக நடந்த யு19 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நேற்று நடந்து முடிந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பங்களாதேஷ் அணி வரலாற்று சாதனை படைத்தது. இருப்பினும், அந்த அணி வீரர்களை பலரும் பாராட்டுவதற்கு பதிலாக குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கின்றனர். இதற்குக் காரணம் போட்டியை வென்ற பின்னர் பங்களாதேஷ் வீரர்கள் நடந்துகொண்ட விதம் தான்.

வெற்றிக்கான ரன்னை பங்களாதேஷ் அணி வீரர் ரகிபுல் ஹாசன் அடித்த பின்னர், சந்தோஷத்தின் உச்சத்தில் அவ்வணியின் வீரர்கள் மைதானத்திற்குள் ஓடி வந்தனர். வந்த வேகத்தில் பலர் வெற்றியின் மகிழ்ச்சியில் குரல் எழுப்ப, சிலர் இந்திய வீரர்களை சீண்டும் வகையில் அருகே சென்று கூச்சலிட்டனர். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத இந்திய வீரர்களும் பதிலுக்கு கோபப்பட, சற்று நேரத்தில் சர்வதேசப் போட்டி தெருச்சண்டையாக மாற முயன்றது. அதற்குள் நடுவரும், இரு அணியின் கேப்டன்களும் சமரசத்திற்கு முயல, ஒருவழியாக மோதல் முடிவுக்கு வந்தது. ஆனால் இந்த விவகாரம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. கண்டனங்களும், கருத்துகளும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

இந்நிலையில் கருத்து தெரிவித்துள்ள யு19 இந்திய அணியின் மேலாளர் அனில் படேல், பங்களாதேஷ் வீரர்கள் போட்டி முடிந்த பின்னர் நடந்துகொண்ட மோசமான விதத்திற்கு கண்டிப்பாக ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பங்களாதேஷ் வீரர்கள் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியளிப்பதாகவும், அவர்கள் எப்படி நடந்துகொண்டனர் என்பதை ஐசிசி வீடியோ காட்சிகளை பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த சம்பவத்திற்காக போட்டிக்குப் பின்னர் நடுவர் தன்னிடம் வருத்தம் தெரிவித்ததாகவும், கண்டிப்பாக ஐசிசி சார்பிலிருந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாகவும் அனில் படேல் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, தங்கள் அணியினர் நடந்துகொண்ட விதத்திற்கு பங்களாதேஷ் அணியின் கேப்டன் அக்பர் அலி வருத்தம் தெரிவித்துள்ளார். தங்கள் அணியினர் அப்படி நடந்துகொண்டது தவறு என்றும், எதிர்பாராத விதமாக நடந்துவிட்டதாகவும், அதற்காக தங்கள் அணி சார்பில் தான் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், இளம் வீரர்கள் வெற்றியின் போது ஆவேசப்பட்டுவிட்டதாகவும், இருப்பினும் அவ்வாறு நடந்துகொண்டிருக்கக்கூடாது எனவும் அவர் வருந்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com