இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியும் பயிற்சியாளர் கும்ப்ளேவும் ஆறு மாதமாகப் பேசிக் கொள்ளவில்லை என்ற தகவல் இப்போது வெளிவந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த கும்ப்ளே நேற்று முன்தினம் அந்த பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். விராத் கோலியுடன் ஏற்பட்ட மோதல்தான் கும்ப்ளேவின் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்பட்டது. தான் பயிற்சியாளராகத் தொடர்வதை கேப்டன் விராத் கோலி விரும்பவில்லை என்று கும்ப்ளே விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக கோலி- கும்ப்ளே இடையிலான பிரச்னையை தீர்க்க, இந்திய கிரிக்கெட் வாரியம் சாமாதான பேச்சுவார்த்தை நடத்தியது.
இதுபற்றி கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, ’தனது அதிகாரத்துக்குட்பட்ட விஷயங்களில் கும்ப்ளே தலையிடுகிறார் என்று கோலி நினைக்கிறார். கும்ப்ளேயை நீக்க வேண்டும் என்று அவர் உறுதியாக இருந்ததால் சமாதானப் பேச்சு தோல்வியில் முடிந்தது. ’கோலியுடன் உங்களுக்கு என்னதான் பிரச்னை?’ என்று கும்ப்ளேவிடம் தனியாகக் கேட்டபோது, ’ ஒன்றுமில்லை’ என்றார். ’சில விஷயங்களில் கருத்து வேறுபாடு இருக்கிறது, அது ஒரு பிரச்னையே இல்லை’ என்றும் கும்ப்ளே தெரிவித்தார். டிசம்பர் மாதம் நடந்த இங்கிலாந்து தொடரில் இருந்தே இரண்டு பேருக்கும் பிரச்னை ஆரம்பித்துவிட்டது. அப்போதிருந்தே அவர்கள் பேசுவதை நிறுத்திக்கொண்டனர். அதாவது கடந்த ஆறு மாதமாக, அவர்கள் சரியாக பேசிக்கொள்ளவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை முடிந்த பிறகும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை’ என்று கூறினார்.