ஹரியானா மாநில விளையாட்டுத் துறை மேம்பாட்டிற்காக அரசு சர்ச்சைக்குரிய முடிவை எடுத்துள்ளது. அரசின் இந்த உத்தரவிற்கு அம்மாநில விளையாட்டு வீரர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஹரியானா மாநில விளையாட்டு வீரர்களுக்கு அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தாங்கள் சம்பாதிக்கும் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை மாநில விளையாட்டு மேம்பாட்டுக்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவிற்கு விளையாட்டு வீரர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுதொடர்பாக பேசிய மல்யுத்த வீராங்கனை பபிதா போகட், “ விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு பயிற்சி செய்கிறார்கள் என அரசுக்கு தெரியுமா..? அவர்கள் எப்படி எங்களது வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை கேட்க முடியும்..? அரசின் இந்த உத்தவை ஒருபோதும் நான் ஆதரிக்கவே மாட்டேன். அரசாங்கம் குறைந்தபட்சம் எங்களிடம் இதுகுறித்து ஆலோசனையாவது செய்திருக்க வேண்டும்” என தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய ஹரியான மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் அனில் விஜ், ஹரியானா அரசு அதிகப்படியான பரிசுத் தொகையை விளையாட்டு வீரர்களுக்கு வழங்குவது அனைவருக்கும் தெரியும் என்றார். மேலும் பேசிய அவர், விளையாட்டு வீரர்கள் எதாவது துறையில் பணியாற்றும் போது அவர்களுக்கு அந்த துறை சார்பில் வழங்கப்படும் பரிசுத்தொகையில் ஒருபகுதிதான் பிடித்தம் செய்யப்படும் என தெரிவித்தார்.