பங்களாதேஷூக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில், இலங்கை அணி, 122 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், இரண்டு போட்டிகளில் வென்று இலங்கை அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் மூன்றாவது ஒரு நாள் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 8 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் குவித்தது. அந்த அணியின் குசல் மெண்டிஸ் 54 ரன்களும் அனுபவ வீரர் மேத்யூஸ் 87 ரன்களும் எடுத்தனர். பங்களாதேஷ் தரப்பில் சவும்யா சர்கார், ஷபியுல் இஸ்லாம் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 36 ஓவர்களில் 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக சவும்யா சர்கார் 69 ரன்களும் தைஜுல் இஸ்லாம் 39 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை.
இலங்கை தரப்பில் ஷனகா 3 விக்கெட்டும் லஹிரு குமரா, ரஞ்சிதா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் பங்களாதேஷ் அணியை ஒயிட்வாஷ் செய்தது இலங்கை அணி. ஆட்டநாயகன் விருதும் தொடர் நாயகன் விருது மேத்யூஸுக்கு வழங்கப்பட்டது.
இந்தப் போட்டி, சமீபத்தில் ஓய்வு பெற்ற இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் குலசேகராவுக்கு சமர்பிக்கப்பட்டது.