வெஸ்ட் இண்டீஸில் நடந்து வரும் கரிபீயன் லீக் டி20 போட்டியில், பந்து தாக்கியதில் ஆண்ட்ரே ரஸல் காயமடைந்தார்.
வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல், ஜமைக்கா தல்லாவஸ் அணிக்காக ஆடி வருகிறார். நேற்று முன் தினம் இரவு நடந்த போட்டியில், தல்லாவஸ் அணியும் செயின்ட் லூசியா சவுக்ஸ் அணியும் மோதின.
இந்த ஆட்டத்தின், 14 வது ஓவரில் ரஸல் பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, ஹர்டுஸ் வில்ஜோயன் வீசிய பந்தை எதிர்கொண்டார். அப்போது அவரது பவுன்சர் பந்து, ஹெல்மெட்டைத் தாண்டியும் ரஸலின் வலது காதில் பலமாக தாக்கியது. இதையடுத்து அவர் மைதானத்தில் சுருண்டு விழுந்தார்.
அந்த அணியின் மருத்துவக்குழு மைதானத்துக்கு விரைந்து வந்து, அவரை ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் சென்றது. பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. பயப்படும்படி எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியதை அடுத்து, ஓட்டல் அறைக்குத் திரும்பினார்.