என்ன நேர்ந்தாலும் ஐபிஎல் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியைவிட்டுப் பிரியமாட்டேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தாண்டு நடைபெற இருந்து ஐபிஎல் டி20 போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காரணமாக கிரிக்கெட் வீரர்கள் பலர் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் சமூகவலைத்தளங்களில் இவர்கள் ஆக்டிவாக இருக்கின்றனர். இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டிவில்லியர்ஸுடன் இன்ஸ்டாகிராமில் விராட் கோலி கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர் " பெங்களூர் அணியுடனான எனது பயணம் அற்புதமானது. உங்களுடன் இணைந்து ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்பது எனது கனவு. பெங்களூர் அணியை விட்டுப் பிரியும் சூழல் எப்போதும் ஏற்படாது. ஐபிஎல் இருக்கும் வரை நான் விளையாடும் வரை பெங்களூர் அணியில் மட்டுமே இருப்பேன். இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் இப்போது நடைபெறவில்லை. பெங்களூர் அணியின் ரசிகர்கள் தரும் ஆதரவு என்னை மெய் சிலிர்க்கச் செய்கிறது" என்றார்.
இந்தக் கருத்தை ஆமோதித்த டிவில்லியர்ஸ் "எனக்கும் பெங்களூர் அணியை விட்டுச் செல்ல மனமில்லை. நான் நிறைய ரன்களைக் குவிக்க வேண்டும். ஆனாலும் நான் கேப்டன் இல்லையே" என்றார் வேடிக்கையாக. தொடர்ந்த கோலி "பெங்களூர் அணிக்காக நிறைய ரன்களைக் குவிக்க வேண்டும். ஒருவர் 500 முதல் 600 ரன்களை குவித்துச் சாதிக்க வேண்டும், அதுவே என் விருப்பம்" எனத் தெரிவித்தார்.