கொரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வருவதால் என் குழந்தைகளை நான் மிகவும் மிஸ் செய்கிறேன் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடிக்கு கொரோனா தொற்று கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “எனக்கு உடல்நிலை சரியில்லை. என் உடல் மோசமாக வலித்தது. நான் கொரோனா பரிசோதனை செய்தேன். துரதிர்ஷ்டவசமாக எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. விரைவில் மீண்டு வர பிரார்த்தனை தேவை. இன்ஷா அல்லாஹ்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ஷாகித் அப்ரிடியின் உடல்நிலை மோசமானதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவ தொடங்கியது. இதனையடுத்து தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அப்ரிடி. அதில் "என் உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதற்காகத்தான் இந்தப் பதிவு. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் மூன்று நாள் மிகவும் சிரமமாக இருந்தது. இப்போது கொஞ்சம் உடல்நிலை தேறிவிட்டது" என தெரிவித்துள்ளார்.
மேலும் அந்தப் பதிவில் "இது குறித்து யாரும் பதற்றப்பட தேவையில்லை. நீங்கள் இறுதி வரை போராட வேண்டும், நோயை தோற்கடிக்க வேண்டும். இந்த நாட்கள் மற்றவர்களைப் போல எனக்கும் கடினமாகத்தான் இருக்கிறது. இந்த 8 - 9 நாட்களாக என்னால் என் குழந்தைகளை பார்த்துக்கொள்ள முடியவில்லை. அவர்களிடம் கொஞ்சவும் கட்டியணைக்கவும் முடியவில்லை. நான் அவர்களை மிகவும் மிஸ் செய்கிறேன்" என தெரிவித்தருக்கிறார் அப்ரிடி.