திருமணத்திற்கு முன்பு வரை அனைத்து ஆண்களும் சிங்கம் தான் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. உலகக் கோப்பை தொடருக்கு பின்பு சில நாட்கள் துணை ராணுவப் படையில் பணியாற்றினார். அதன்பின்னர், எந்த தொடரிலும் வாய்ப்பு அளிக்கப்படாததால், தற்போது அவர் ஓய்வில் இருந்து வருகிறார். இந்தச் சூழலில் அவர் அவ்வப்போது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் தோனி பங்கேற்றார். இதில் தனது இல்லற வாழ்க்கை குறித்து தோனி மனம் திறந்துள்ளார். அதில், “திருமணத்திற்கு முன்பு வரை அனைத்து ஆண்களும் சிங்கம் தான். நானும் மற்ற கணவர்களைப் போல ஒருவன் தான். என்னுடைய மனைவி என்ன விரும்புகிறாரோ அதனை செய்ய நான் அனுமதி வழங்கி விடுவேன். ஏனென்றால் என்னுடைய மனைவி மகிழ்ச்சியாக இருந்தால் தான் நான் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
அதேபோல் என் மனைவி கூறும் எல்லா விஷயத்திற்கும் ஓகே சொன்னால் தான் அவர் மகிழ்ச்சியாக இருப்பார். ஆகவே தான் நான் அவர் நினைப்பதை செய்ய விட்டுவிடுவேன். திருமண வாழ்க்கையின் முக்கிய படலமே 50 வயதிற்கு பிறகுதான். ஏனென்றால் நீங்கள் 55 வயதை கடந்து விட்டால் தான் உங்களுக்கு உண்மையாக காதல் வயது வரும். அந்த வயதில்தான் நீங்கள் உங்களுடைய வழக்கமான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு இந்த விஷயங்களை பற்றி யோசிக்க ஆரம்பிப்பீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மகேந்திர சிங் தோனிக்கும், அவரது தோழியான சாக்ஷிக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு ஜிவா என்ற பெண் குழந்தை உள்ளது. தோனியின் இந்த அனுபவ பூர்வமான பேச்சு அவரது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.