இந்திய பந்துவீச்சாளர்களுக்கு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், ’தம்ஸ் அப்’ காட்டியதற்கு முன்னாள் வீரர் ஆலன் பார்டர் விமர்சித்திருந்த நிலையில், அதற்கு சக வீரர் அலெக்ஸ் கேரி பதிலடி கொடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே, கடந்த 9ஆம் தேதி நாக்பூரில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி தோல்வி கண்டதற்கு ஆடுகளம்தான் காரணம் என அந்நாட்டு ஊடகங்கள் குற்றஞ்சாட்டியிருந்தன. இதற்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, “தோல்விக்கு ஆடுகளங்களை ஏன் குறை கூறுகின்றனர். வீரர்கள்தான் கவனத்துடன் ஆட வேண்டும்” எனப் பதிலடி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில், அந்த மைதானத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாகவே செயல்பட்டனர். இந்திய அணியில் அஸ்வின் ராமச்சந்திரன், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறப்பாய் பந்துவீசி விக்கெட் வீழ்த்தினர். இவர்கள் சிறப்பாய்ப் பந்துவீசியதற்கு ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித், கட்டைவிரலை உயர்த்தி ‘தம்ஸ் அப்’ காண்பித்தார். சுழல் பந்துவீச்சாளர் தமக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் சிறப்பாக பந்து வீசினால் அவருக்கு கட்டைவிரலை உயர்த்தி வாழ்த்துவது ஸ்மித்தின் வழக்கம். இந்தப் போட்டியில் மட்டுமின்றி அவர் இதுபோன்று, வேறு பல போட்டிகளிலும் எதிரணி வீரர்களுக்கு சைகைகள் செய்து வாழ்த்து கூறி வருகிறார்.
தவிர பேட்டிங்கிலும் வித்தியாசமாக விளையாடக்கூடியவர் ஸ்மித். அவர் முதல் டெஸ்டில் இந்திய அணிக்கு எதிராக இதுபோன்று செய்ததற்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆலன் பார்டர் கடுமையாக விமர்சித்திருந்தார். ஆலன் பார்டர், “ஆஸ்திரேலியாவின் பெயரையே தற்போது இருக்கும் வீரர்கள் கெடுத்துவிட்டார்கள். ஆஸ்திரேலிய வீரர்கள் எப்போதுமே களத்தில் கடினமாக நடந்துகொள்வார்கள். ஆனால் தற்போது நெருக்கடி கொடுக்கும் வகையில் பந்துவீசும் வீரருக்கு நமது பேட்ஸ்மேன்கள் கட்டை விரலை உயர்த்தி பாராட்டுகிறார்கள்.
இது, அபத்தமானது. இதை, கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியாது. வீரர்கள் இப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்ளாதீர்கள். ஆஸ்திரேலிய அணி, எப்போதும் களத்தில் ஆக்ரோஷமாக விளையாடும் அணி. ஆனால் எதிரணி வீரர்களை பாராட்டும் வகையில் கட்டைவிரலை உயர்த்துவது, its Bloody hell. நாம் எது வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் களத்தில் விளையாடும் வீரர்கள் தங்களின் பேட்டை வைத்துத்தான் பதில் சொல்ல வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு சக நாட்டு விக்கெட் கீப்பரான அலெக்ஸ் கேரி பதிலடி கொடுத்துள்ளார். “ஆலன் பார்டரை நாங்கள் மதிக்கிறோம். இருப்பினும், இந்தியாவுக்கு எதிராக நாங்கள் நிறைய விளையாடுவதால் வெவ்வேறு விஷயங்களை செய்கிறோம். இந்திய அணி வீரர்கள் குறித்து ஸ்மித்துக்கு நன்கு தெரியும். அதுதான் அவர் விளையாடும் விதம். ஸ்மித், அவர்களைப் பாராட்டியதன் மூலம் விளையாட்டில் மேலும் அதிக கவனம் செலுத்த முடிகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
- ஜெ.பிரகாஷ்