இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அலஸ்டைர் குக், என்னை மறக்க மாட்டார் என்று இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ஹனுமா விஹாரி கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடியது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற இந்திய அணி மூன்றாவது போட்டியில் அபார வெற்றி பெற்றது. சவுதாம்டனில் நடந்த நான்காவது போட்டியில் வெற்றியின் அருகே சென்று தோல்வியை தழுவியது. கடைசி டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோற்று தொடரை இழந்தது.
இந்த தொடரில் கடைசி டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக ஆந்திராவைச் சேர்ந்த ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டார். அவர் முதல் இன்னிங்ஸில் 121 பந்துகளை சந்தித்து ஒரு சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்தார். அடுத்து இங்கிலாந்து அணியின் 3 முக்கிய விக்கெட்டுகளையும் சாய்த்தார். இந்நிலையில் இந்தியா திரும்பிய அவருக்கு ஐதராபாத் விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் வரிசையாக ’பேட்’களை உயர்த்தி பிடித்தபடி அவரை வரவேற்றனர்.
பின்னர் விஹாரி கூறும்போது, ’இங்கிலாந்து டெஸ்ட் தொடர் எனக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. அங்கு நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். எதிர்பாராதவிதமாக 56 ரன்களில் ஆட்டமிழந்து விட்டேன். இது ஏமாற்றமாக இருந்தது. விராத் கோலி எனக்கு அதிக நம்பிக்கை அளித்தார். பந்துவீச வேண்டும் என்றும் முதலில் கூறப்பட்டது. அதற்கு தயாராகவே இருந்தேன். அலஸ்டைர் குக், ஜோ ரூட், சாம் கர்ரன் விக்கெட்டுகளை வீழ்த்தினேன். என் முதல் போட்டியிலேயே மூன்று விக்கெட் வீழ்த்தியதில் மகிழ்ச்சி. அதோடு, அலஸ்டைர் குக்கின் கடைசி விக்கெட்டை வீழ்த்தியது நான் தான். அதனால் அவரால் என்னை மறக்கவே முடியாது’ என்றார் விஹாரி.