கோலி ஓய்வுப் பெறுவதற்குள் டெஸ்ட் இன்னிங்ஸில் 300 ரன்கள் எனும் சாதனையை நிகழ்த்துவார் என எதிர்பார்ப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. இதனையொட்டி "ஸ்டார் ஸ்போர்ட்ஸ்" தொலைக்காட்சியில் பேசிய அஜித் அகர்கர் "டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு கோலி நிச்சயம் 300 ரன் அடிப்பார் என நான் நம்புகிறேன். இப்போதுவரை வீரேந்திர சேவாக், கருண் நாயர் ஆகியோர் 300 ரன்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளாசியுள்ளனர். விராட் கோலியால் நிச்சயம் அந்தச் சாதனையை செய்ய முடியும், அவருக்கு அந்த உத்வேகம் இருக்கிறது" என்றார்.
மேலும் பேசிய அவர் "நிச்சயம் ஓய்வுப் பெறுவதற்கு முன்பு அந்த சாதனையை அவர் நிகழ்த்துவார். இதுமட்டுமல்லாமல் மேலும் பல சாதனைகளை கோலி முறியடிப்பார். சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்து 12 ஆண்டுகள் ஆகிறது என சொல்கிறார்கள். ஆனால் எனக்கென்னவோ கோலி வந்து 20 ஆண்டுகள் கழிந்துவிட்டது என்கிற உணர்வு ஏற்படுகிறது. அவர் அவ்வளவு அருமையாக தன்னை படிப்படியாக வளர்த்துக்கொண்டார். இது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது" என்றார் அகர்கர்.