கங்காரு ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு. அந்த வடிவிலான கேக்கை வெட்ட நான் விரும்பவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் திறம்பட வழிநடத்தியவர் கேப்டன் ரஹானே. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான அவர் கோலி இல்லாத சமயங்களில் கேப்டனாக வழிநடத்துவது வழக்கம். மெல்போர்ன், சிட்னி மற்றும் காபா என மூன்று மைதானங்களில் நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியை வழிநடத்தியதோடு 2 - 1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்ற உதவியுள்ளார் ரஹானே. ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரும் கொண்டாடி வருகின்றனர்.
வெற்றிக் கோப்பையுடன் நாடு திரும்பிய அவருக்கு மும்பையில் உள்ள அவரது வீட்டுக்கு பக்கத்தில் வாழும் அக்கம் பக்கத்தினர் தடபுடலான ஏற்பாடுகளை செய்துள்ளனர். ஆரவாரமாக அனைவரும் ரஹானேவை வரவேற்றதோடு அவருக்கென கேக் ஒன்றையும் தயார் செய்து வைத்திருந்துள்ளனர். அந்த கேக்கை வெட்ட சென்றபோதுதான் அதில் கங்காரு பொம்மை வடிவில் பொம்மை ஒன்று இருந்ததை ரஹானே பார்த்துள்ளார். உடனடியாக அந்த கேக்கை வெட்டவும் மறுத்துள்ளார் ரஹானே.
இதுகுறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவுடனான கலந்துரையாடலில் பேசிய ரஹானே "கங்காரு அவர்களின் தேசிய விலங்கு. எனவே அந்த வடிவிலான கேக்கை வெட்ட விரும்பவில்லை. உங்களின் எதிரணியை நீங்கள் மதிக்க வேண்டும். வெற்றியோ தோல்வியோ அல்லது வரலாற்றை படைக்கிறோமோ எப்போதும் எதிரணிக்கும் அந்த நாட்டையும் நாம் மதிக்க வேண்டும். இதனால்தான் கங்காரு பொம்மை கேக்கை வெட்ட நான் மறுப்பு தெரிவித்தேன்" என்றார்.