இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. நாளை ஆரம்பமாகும் முதல் டெஸ்ட் போட்டியில் பகல் இரவு ஆட்டமாக ஆஸ்திரேலியாவுடன் விளையாடுகிறது. இந்த போட்டி முடித்த பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்தியா திரும்புகிறார். அதனால் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளையும் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்த உள்ளார் ரஹானே.
இந்நிலையில், ரஹானேவின் கேப்டன்ஸி குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர்.
“ரஹானே அணியை வழிநடத்தி இதற்கு முன்னர் பார்த்துள்ளேன். அவர் ஆக்ரோஷமானவராக இருந்தாலும் அதை கட்டுப்படுத்த தெரிந்தவர். நான் அவரது ஆட்டத்தை பக்கத்தில் இருந்து பார்த்துள்ளேன். அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கடினமான உழைப்பை களத்தில் அர்பணிப்பாக கொடுத்து விளையாடுபவர். நிச்சயம் அவர் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.
கிரிக்கெட் தனி நபரை சார்ந்தது இல்லை. அது 11 பேரின் கூட்டு முயற்சி. இந்திய அணியின் பேட்டிங்கில் டெப்த் உள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் கடந்த முறையை காட்டிலும் இந்த முறை அனுபவம் வாய்ந்ததாக உள்ளது” என சச்சின் தெரிவித்துள்ளார்.