‘என் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் பதவியை தந்திருப்பது மிகழ்ச்சியாக இருக்கிறது’ என்று தென்னாப்பிரிக்க வீரர் மார்க்ரம் கூறினார்.
தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. டர்பனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது. விராத் கோலி சதமடித்தார். ரஹானே 79 ரன்கள் குவித்து வெற்றிக்கு உதவினார். இந்த தொடரில் இந்திய அணி, 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி செஞ்சூரியனில் இன்று நடக்கிறது.
தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளிசிஸ், காயம் காரணமாக விலகியதால், அவருக்கு பதிலாக 23 வயதான மார்க்ராம், கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை வெறும் 2 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார்.19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் கேப்டனாக இருந்தவர்.
கேப்டன் பதவி பற்றி மார்க்ராம் கூறுகையில், ‘கேப்டன் பதவி, எனக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய கவுரவம். தேர்வாளர்கள் என் மீது நம்பிக்கை வைத்து இதை வழங்கியுள்ளனர். இது என் கனவும் கூட. கேப்டன் பொறுப்பு கூடுதல் நெருக்கடி என்பதை அறிவேன். நெருக்கடியை என்னால் சமாளிக்க முடியும். அணியின் அம்லா, டுமினி போன்ற மூத்த வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஆலோசனை கேட்பேன். டுபிளிசிஸ் அணியில் இல்லாதது பெரிய இழப்புதான்’ என்றார்.