விளையாட்டில் சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை கோவையைச் சேர்ந்த 4 மூத்த வீராங்கனைகள் நிரூபித்து வருகின்றனர்.
கோவையைச் சேர்ந்த வசந்தா, பெட்ரிசா, லட்சுமி, சிவகாமி 70 வயதைக் கடந்த மூத்த வீராங்கனைகள். பல காரணங்களால் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் முதியவர்களுக்கு மத்தியில், இவர்களின் தடகளப் பயணம் சர்வதேச அளவில் கொடிகட்டிப் பறக்கிறது. விடாமுயற்சியாலும், விளையாட்டு மீது கொண்ட ஆர்வத்தாலும் தற்போதும் தடகளத்தில் ஜொலித்து வருகின்றனர். கடந்த மாதம் சீனாவில் நடைபெற்ற மூத்தோருக்கான ஆசிய தடகளப் போட்டியில் கோவையைச் சேர்ந்த வீராங்கனைகள் மட்டும் 16 பதக்கங்களை வென்று வியக்க வைத்தனர்.
தங்களின் சாதனைப் பயணத்திற்கு குடும்பத்தினர் அளிக்கும் உற்சாகமே காரணம் எனக் கூறுகிறார், சர்வதேச தடகளத்தில் இதுவரை 26 பதக்கங்களை வென்ற லட்சுமி. விளையாட்டில் கவனம் செலுத்துவதால், உடல் நலத்தில் எந்தப் பிரச்னையும் ஏற்படுவதில்லை என மற்றவர்களுக்கும் உற்சாகமூட்டுகிறார் இவர். ஒலிம்பிக் போன்ற விளையாட்டுகளில் சாதிக்க அரசு உரிய ஊக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மூத்த வீரர், வீராங்கனைகள் முன்வைக்கின்றனர்.