ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா நாடுகளில் உள்ள சிறந்த வீரர்களைக் கொண்டு ஆசியா - ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் கொண்டு வரப்பட்டது. ஆசிய அணியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். ஆப்பிரிக்க அணியில் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் கென்யா அணி வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். அதன்படி, முதல்முறையாகக் கடந்த 2005-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இந்த போட்டி தொடர் நடைபெற்றது. அடுத்து 2007ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்றது.
2005இல் இரு அணிகளிலும் இரண்டு போட்டிகளில் தலா ஒரு வெற்றி பெற்றிருந்த நிலையில், மூன்றாவது போட்டி கைவிடப்பட்டது. அடுத்து 2007இல், ஆசிய அணி 3-0 என்ற கணக்கில் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தியது. அதன்பிறகு 2009ஆம் ஆண்டு தொடரை கென்யா நடத்த விரும்பியது. ஆனால் சில காரணங்களால் அது நடைபெறவில்லை. அதைத் தொடர்ந்து இத்தொடரை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், தற்போது இதுகுறித்து பேச்சு நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலேசியாவில் நடைபெற்ற கூட்டத்தில் இதுபற்றி ஆப்பிரிக்க கிரிக்கெட் அமைப்பு அதிகாரிகள், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அடுத்த ஆண்டு, ஜூன் மாதம் நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப்போட்டிக்குப் பிறகு, இந்த தொடர் மீண்டும் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ACAஇன் இடைக்காலத் தலைவரும், ஜிம்பாப்வே கிரிக்கெட் சங்கத் தலைவருமான தவெங்வா முகுஹ்லானி, “ஆசியா கிரிக்கெட் கவுன்சிலில் உள்ள எங்கள் சகாக்களுடன் நாங்கள் உரையாடினோம். வெளிப்படையாக எங்கள் ஆப்பிரிக்க அணிகள், ஆப்ரோ-ஆசியா கோப்பை மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த 2005 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தொடர்களின்போது ஆசிய அணியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஒன்றாக விளையாடியது குறிப்பிடத்தக்கது. 2005ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரின்போது, ஆசிய லெவன் அணியில் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தலைமையில் குமார் சங்ககரா, வீரேந்தர சேவாக், ஜாகீர் கான், அனில் கும்ப்ளே, சோயப் அக்தர். ஷாஹித் அப்ரிடி, சனத் ஜெயசூர்யா, ராகுல் டிராவிட், ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் விளையாடினர்.
அடுத்து 2007-இல் நடைபெற்ற ஆசிய லெவன் அணி மகிலா ஜெயவர்த்தனே தலைமையில் ஆடியது. அந்தப் தொடரில் வீரேந்தர் சேவாக், சனத் ஜெயசூர்யா, ஷோயப் அக்தர், முகமது ஆசிப், முகமது யூசுப், ஜாகீர் கான், யுவராஜ் சிங், எம்எஸ் தோனி, சவுரவ் கங்குலி, ஹர்பஜன் சிங் ஆகியோர் பங்கேற்றனர். எனவே, மீண்டும் இத்தொடர் நடத்தப்பட்டால் அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஒரே அணியில் இடம்பெறும் வாய்ப்பு ஏற்படும். அந்த வகையில், பாகிஸ்தானின் பாபர் அசாமோடு இந்திய நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி ஆட வாய்ப்பிருக்கும். 2008ஆம் ஆண்டு ஆசியக் கோப்பைக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்லவில்லை. அதேநேரத்தில், ஐசிசி நடத்தும் சர்வதேச போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதினாலும், அது பொதுவான நாடுகளில் மட்டுமே நடத்தப்படுகின்றன.