கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து அஸ்வினை நீக்கும் முடிவை, அந்த அணி கைவிட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக, கடந்த 2 தொடர்களாக செயல்பட்டு வந்தார் அஸ்வின். 139 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 125 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அஸ்வின், கேப்டனாக 28 போட்டிகளில் 25
விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் கேப்டனாக செயல்பட்ட 2 ஐபிஎல் தொடர்களில், லீக் சுற்றோடு பஞ்சாப் வெளியேறியது.
அதோடு புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரோடு களமிறங்கிய டெல்லி அணி சிறப்பாக ஆடியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் புதிய கேப்டனாக ஸ்மித்தை நியமித்தது.
இதையடுத்து பஞ்சாப் அணிக்கும் புதிய கேப்டனை நியமிக்க அந்த நிர்வாகம் முடிவு செய்து, கே.எல்.ராகுலை புதிய கேப்டனாக நியமிக்க முடிவு செய்தது. அஸ்வினை, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வாங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக, இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டார். அவரது ஆலோசனையின் படி, அஸ்வினை பஞ்சாப் அணியே தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது.
இதுபற்றி பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியா கூறும்போது, ‘’ அஸ்வினை, டெல்லி அணிக்கு நாங்கள் மாற்றவில்லை. முதலில் நாங்கள் எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்துள்ளோம். அவர் பஞ்சாப் அணியிலேயே தொடர்வார்’’ என்றார்.