இந்த சதம் இல்ல, அதுதான் பெஸ்ட்! மனம் திறக்கும் விராத்!

இந்த சதம் இல்ல, அதுதான் பெஸ்ட்! மனம் திறக்கும் விராத்!
இந்த சதம் இல்ல, அதுதான் பெஸ்ட்! மனம் திறக்கும் விராத்!
Published on

இங்கிலாந்தில் அடித்த சதத்தை விட ஆஸ்திரேலியாவில் அடித்த சதம்தான் ஸ்பெஷலானது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, பர்மிங்ஹாமில் நடந்து வருகிறது. இது இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு ஆயிரமாவது டெஸ்ட் போட்டி. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 287 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் 80 ரன்னும் பேர்ஸ்டோவ் 70 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி 274 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தாலும், விராத் கோலி, அபாரமாக ஆடி சதமடித்தார். அவர் 225 பந்துகளில் 149 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். இது அவருக்கு சாதனை சதம். இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த முதல் சதம் இது. இதையடுத்து இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை குவிக்காதவர் என்ற விமர்சனத்தை உடைத்துள்ளார்.

அவரது ஆக்ரோஷ ஆட்டம் இங்கிலாந்து வீரர்களை கூட கைதட்ட வைத்தது. அவர் போராட்டக் குணத்துடன் ஆடிய விதம் கண்டும் அபார சதம் அடித்தது பற்றியும் பல கிரிக்கெட் வீரர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த சதம் பற்றி விராத் கோலி கூறும்போது, ’ஆஸ்திரேலியாவுக்கு எதிராகக் கடந்த 2014-ம் ஆண்டு ஆடிலெய்டில் அடித்த சதம் சிறப்பான ஒன்று. அதுதான் எனக்கு ஸ்பெஷலானது. அந்த சதத்தை என்னால் மறக்க முடியாது. இரண்டாவது இன்னிங்ஸில் 364 ரன்களை சேஸிங் செய்தபோது அடித்த சதம் அது. இப்போது அடித்த சதம் மகிழ்ச்சியை தந்தாலும் சிறப்பானது என்று நினைக்கவில்லை. 

இந்திய அணியைக் குறைந்தபட்சம் 10-15 ரன்களாவது முன்னிலை பெற வைக்க வேண்டும் என நினைத்திருந்தேன். கடைசி வரிசையில் இறங்கிய ஹர்திக் பாண்டியா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இருந்தாலும் அதற்குள் ஆட்டமிழந்து விட்டேன். இது வேதனையளித்தது. நாங்கள் இன்னும் சிறப்பாகப் பந்துவீசி இருக்க வேண்டும். எதிரணியின் ஸ்கோருக்கு அருகில் அணியை கொண்டு வந்ததில் மகிழ்ச்சி. இந்தப் போட்டி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சோதனை அளிக்கும் ஒன்று’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com