“தன்னலமற்ற சேவையை தொடருங்கள் ஷெரோன்”: கில்கிறிஸ்ட் பாராட்டிய இந்திய செவிலியர் !

“தன்னலமற்ற சேவையை தொடருங்கள் ஷெரோன்”: கில்கிறிஸ்ட் பாராட்டிய இந்திய செவிலியர் !
“தன்னலமற்ற சேவையை தொடருங்கள் ஷெரோன்”: கில்கிறிஸ்ட் பாராட்டிய இந்திய செவிலியர் !
Published on

ஆஸ்திரேலியாவின் முதியோர் இல்லத்தில் பணிபுரிந்து வரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த செவிலியர் ஒருவரின் சேவையை ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் வெகுவாக பாராட்டியுள்ளார். இதன் காரணமாக அந்த செவிலியர் ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளார்.

கேரள மாநிலம் கோட்டயத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஷெரோன் வர்கீஸ் தனது மேற்படிப்பை ஆஸ்திரேலியாவில் மேற்கொண்டார். அங்குள்ள வெல்லங்காங் பல்கலைக் கழகத்தில் செவிலியர் பிரிவைத் தேர்வு செய்து படித்தவர், தனது 23ஆவது வயதில் படிப்பை முடித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். கொரோனா பரவுவதற்கு முன்பே ஆஸ்திரேலியாவில் தன்னை செவிலியராகப் பதிவு செய்து கொண்டார் ஷெரோன். பின்னர் அங்குள்ள முதியோர் காப்பகத்தில் பணிக்குச் சேர்ந்தார்.

ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவிய காலம் முதல் ஷெரோன் வர்கீஸ் தன்னலம் பாராது அங்குள்ள முதியோர் இல்லத்தில் சிறப்பாகப் பணியாற்றினார். கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டார். அந்த வீடியோவில் "கொரோனா தடுப்பு பணியில் நாங்கள் முன்வரிசையில் நின்று மிகத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறோம். மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என நாங்கள் அனைவரும் மக்களுக்காக முடிந்த வரை அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்" என்று தெரிவித்திருந்தார்.

இதனைப் பார்த்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் "கொரோனா பரவல் காலகட்டத்தில் ஷெரோன் முதியோர் இல்லத்தில் தன்னலம் கருதாது சேவையாற்றி வருகிறார். புனிதமான இந்தச் சேவையை அவர் மென்மேலும் தொடர எனது வாழ்த்துகள். அவரின் இந்த தன்னலமற்ற சேவையை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாட்டைச் சார்ந்தவர்கள் பெருமையாகக் கருதுவார்கள்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com