விம்பிள்டன் டென்னிஸின் ஆடவர் அரை இறுதிப் போட்டி ஒன்றில் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் வெற்றி பெற்றார்.
விம்பிள்டனின் புகழ்ப் பெற்ற மத்திய மைதானத்தில் நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஜான் இஸ்நரை எதிர்கொண்டார் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன். தொடக்கம் முதலே இருவரும் சிறப்பாக ஆடிய நிலையில் முதல் மூன்று செட்களுமே டை பிரேக்கர் வரை சென்றன. இதில் முதல் செட்டை 7-6 என ஆண்டர்சன் கைப்பற்றினார். ஆனால், அடுத்த இரண்டு செட்களை 7-6, 7-6 என்ற கணக்கில் ஜான் இஸ்நர் கைப்பற்றினார். நான்காவது செட்டை 6-4 என கைப்பற்றினார் கெவின் ஆண்டர்சன். இதனால் வெற்றியைத் தீர்மானிக்கும் ஐந்தாவது செட்டில் இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் ஆட, அந்த செட் மட்டும் இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடங்கள் நீடித்தது.
இறுதியில் ஐந்தாவது செட்டை 26-24 என்ற கணக்கில் கெவின் ஆண்டர்சன் கைப்பற்றி வெற்றி வாகை சூடினார். இந்த வெற்றியின் மூலம் அவர் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.
ஆறு மணி நேரம் 35 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியே விம்பிள்டனில் அதிக நேரம் நடைபெற்ற அரை இறுதிப் போட்டி என்ற சிறப்பைப் பெறுகிறது. இருப்பினும் விம்பிள்டனில் நீண்ட நேரம் நடைபெற்ற போட்டி என்ற வகையில் இரண்டாவது இடத்தையே இப்போட்டி பெறுகிறது. 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் போட்டியின் முதல் சுற்றில் ஜான் இஸ்நர்- நிகோலஸ் மஹூத் இடையேயான போட்டி 11 மணி நேரம் ஐந்து நிமிடம் நடைபெற்றது.