ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 243 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாக்பூர் நகரில் இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. வார்னரும், ஆரோன் பிஞ்சும் சிறப்பான தொடக்கம் அமைத்தனர். பிஞ்ச் 32, வார்னர் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பின்னர் ஸ்மித் 16, ஹாண்ட்ஸ்கோம் 13 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 118 ரன்களுக்குள் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்தது.
இதனையடுத்து, ஹெட் மற்றும் ஸ்டோனிஸ் இருவரும் இணைந்து சீரான வேகத்தில் ரன் சேர்த்தனர். அதேபோல், விக்கெட் விளாமல் பார்த்துக் கொண்டனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் சற்று திணறினர். இறுதியில், ஹெட் 42, ஸ்டோனிஸ் 46 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்தது. கடைசி 6 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி வெறும் 32 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் அக்ஸர் பட்டேல் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி முதல் 3 போட்டிகளை வென்று ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ளது. 4-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் இழந்த நெம்பர் 1 இடத்தை இந்திய அணி மீண்டும் பிடிக்க வாய்ப்புள்ளது.