ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி பெங்களூரு மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்தது. டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி 119 பந்துகளில் 124 ரன்கள் எடுத்தார். பிஞ்ச் 94 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் 335 என்ற கடின இலக்குடன் விளையாடிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, ரகானே சிறப்பான அடித்தளம் அமைத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்தது. ரகானே(53), ரோகித் சர்மா(65) ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் விராட் கோலியும் 21 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் இந்திய அணிக்கு சற்று சரிவு ஏற்பட்டது. இதனையடுத்து, பாண்ட்யாவும், ஜாதவும் ஜோடி சேர்ந்து விக்கெட் வீழ்ச்சியில் இருந்து மீட்டு நிதானமாக ரன்களை சேர்ந்தனர். இடைஇடையே பாண்ட்யா சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
இந்த நிலையில், பாண்ட்யா 41 ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 78 ரன்கள் சேர்த்தது. பின்னர், ஜாதவுடன் மணிஷ் பாண்டே சேர்ந்து சிறிது நேரம் போராடினர். இருப்பினும் ஜாதவ்(67), பாண்டே(33) ரன்களில் ஆட்டமிழந்தனர். தோனியும் 13 ரன்களில் ஆட்டமிழக்க இந்தியாவின் தோல்வி உறுதியானது. இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த தொடரில் தனது முதல் வெற்றியை ஆஸ்திரேலியா பதிவு செய்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ரிச்சர்டுசன் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். கவுல்டர் நைல் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.