தொடர்ச்சியாக 4 தோல்விகள் ! ஆனாலும் சென்னை சாம்பியன்! திரும்புமா ’2010’ மேஜிக் வரலாறு!

தொடர்ச்சியாக 4 தோல்விகள் ! ஆனாலும் சென்னை சாம்பியன்! திரும்புமா ’2010’ மேஜிக் வரலாறு!
தொடர்ச்சியாக 4 தோல்விகள் ! ஆனாலும் சென்னை சாம்பியன்! திரும்புமா ’2010’ மேஜிக் வரலாறு!
Published on

நடப்பு ஐபிஎல் தொடரைப் போலவே சென்னை சூப்பர் கிங்ஸ் முதன்முதலாக மகுடம் சூடிய 2010 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் சென்னை தொடர்ந்து 4 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த நிலையிலும் சாம்பியன் பட்டம் வென்றது!

துவக்கத்திலேயே 4 தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திணறி வருகிறது நடப்புச் சாம்பியன் “சென்னை சூப்பர் கிங்ஸ்”. தோல்விகள் அடைவதும், அதன்பின் மீண்டெழுந்து வந்து மகுடம் சூடுவதும் சென்னைக்கு புதிதல்ல! ஆனால் 10 அணிகள் கொண்ட தொடரில் இந்த தோல்விகள் ப்ளே ஆப் வாய்ப்பையே காலி செய்து விடும் என வருந்தி வருகிறார்கள் சிஎஸ்கே ரசிகர்கள். அவர்களுக்கு ஒன்றை மட்டும் நினைவுப்படுத்த வேண்டும். சென்னை 4 தோல்விகளை முதன்முறையாக சந்தித்த 2010 ஆம் ஆண்டில் புத்துயிர் பெற்று எழுந்து சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக கைப்பற்றி இருந்தது.

தொடர்ந்து 4 தோல்விகள் : அன்றும் இன்றும்!

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக சென்னையின் தோல்விப்பயணம் துவங்கியது. 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த சென்னை, லக்னோவுக்கு எதிராக அதே 6 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. 3வதாக பஞ்சாப் அணியிடம் 54 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. கடைசியாக..,? 4வதாக தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த சன்ரைசர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற வைத்து சென்னை தோல்வியை தழுவியது.

2010 ஆம் ஆண்டில் துவக்கத்திலேயே சென்னை தொடர் தோல்வியை சந்திக்கவில்லை. லீக் ஆட்டங்கள் உச்சம் பெற்ற வேளையில் தோல்விகளை சந்தித்து திணறியது. கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிராக சூப்பர் ஓவர் வரை சென்று போராடித் தோற்றது. பெங்களூரூ அணிக்கு எதிராக 36 ரன்கள் வித்தியாசத்தில் 2வது தோல்வியை சந்தித்தது. மும்பை அணிக்கு எதிராக 5 விக்கெட் வித்தியாசத்திலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 17 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியுற்றது.

கம்பேக் : அன்று அப்படி? இன்று எப்படி?

4 ஆட்டங்கள்! சீசனில் எல்லா அணிகளும் ப்ளே ஆப் நோக்கி நகரும்போது சென்னை 4 தோல்விகளை சந்தித்து இருந்தது. பீனிக்ஸ் பறவையாக புத்துயிர் பெற்று எழுந்தது சென்னை அணி. இந்த தொடர் தோல்விகளை அடையவைத்த அணிகளை தனது கோட்டையான சென்னை மைதானத்தில் வைத்து தோல்வியடையச் செய்து ஹாட்ரிக் வெற்றி பெற்றது. பெங்களூர், ராஜஸ்தான், மும்பை அணிகளை அபாரமாக வீழ்த்தி புலிப்பாய்ச்சல் போட்டு முன்னேறி இருந்தது சென்னை அணி.

சுரேஷ் ரெய்னா, முரளி விஜய், மேத்யூ ஹைடன், மகேந்திர சிங் தோனி, பத்ரிநாத் ஆகிய ஒவ்வொருவரும் சீசன் முழுக்க 250 ரன்களுக்கு மேல் குவித்து பேட்டிங்கை தாங்கிப் பிடித்தனர். முத்தையா முரளிதரன், சதாப் ஜகாடி, அஸ்வின், டக் பொலிங்கர், அல்பி மோர்கல் ஆகிய பவுலர்கள் ஒவ்வொருவரும் 10 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி எதிரணிகளை கிலி ஏற்படச் செய்திருந்தனர். தொடர் தோல்விகளில் இருந்து அணியை தொடர் வெற்றிக்கு நகர்த்திச் சென்றது இந்த கூட்டணி.

அரையிறுதியில் டெக்கான் சார்ஜர்ஸை 38 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது சென்னை அணி. இறுதிப்போட்டியில் சச்சின் தலைமையில் 14 போட்டிகளில் 10 போட்டிகளில் வென்ற அசுர பலம் வாய்ந்ததாக கருதப்பட்ட மும்பை இந்தியன்ஸை மண்ணை கவ்வச் செய்து மகுடம் சூடியது சென்னை சூப்பர் கிங்ஸ். 22 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியைச் சாய்த்தது சென்னை அணி. துவக்கத்தில் 68/3 என திணறிய சென்னை அணியை 168 ரன்களை நோக்கி உயர்த்தினார் சுரேஷ் ரெய்னா. சீசன் முழுவதும் ரெய்னா விளாசிய மொத்த ரன்கள் 520. இதில் 4 அரைசதங்களும் அடங்கும்.

டாப் ஆர்டரில் உதவ முரளி விஜய், மேத்யூ ஹைடன், மிடில் ஆர்டருக்கு சுரேஷ் ரெய்னா, பத்ரினாத்; பினிஷிங் என்றாலே தோனி, பவுலிங்கிற்கு முரளிதரன், அல்பி மோர்கல், அஸ்வின் என பலம் வாய்ந்த அணியாக இருந்தது. தோல்வியால் துவளாமல், மீண்டெழுந்து வந்தது. ஆனால் இன்று..?!

இன்று பேட்டிங் முதல் பவுலிங் வரை அனைத்திலும் ஒவ்வொரு பிரச்சினை. தோனி மொழியிலேயே சொல்லலாம், “Too many holes in the Ship". 2020 சீசனை போல இல்லாமல் அடுத்தடுத்த மாற்றங்களை செய்ய அணி தற்போது சில மெனக்கெடல்களை செய்கிறது. சரியான சமயம் வரும்போது ஓட்டைகள் ஒவ்வொன்றாக சரிசெய்யப்படும். ஆனால் அது சீக்கிரம் நிகழ வேண்டும். இல்லையென்றால் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக சென்னை விடைகொடுப்பது போல ஆகிவிடும்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com