”அந்த பேச்சையெல்லாம் குப்பையில் போடுங்கள்” - ரவி சாஸ்திரிக்கு பதிலடி கொடுத்த ரோகித் சர்மா!

”அந்த பேச்சையெல்லாம் குப்பையில் போடுங்கள்” - ரவி சாஸ்திரிக்கு பதிலடி கொடுத்த ரோகித் சர்மா!
”அந்த பேச்சையெல்லாம் குப்பையில் போடுங்கள்” - ரவி சாஸ்திரிக்கு பதிலடி கொடுத்த ரோகித் சர்மா!
Published on

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியுற்றதற்கு, இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணி, கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. தற்போது இவ்விரு அணிகளுக்கான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும், 3வது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றுள்ளது. நாளை அகமதாபாத்தில் கடைசி மற்றும் 4வது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் இந்தப் போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றே தீர வேண்டும்.

இந்த நிலையில், கடந்த மார்ச் 1ஆம் தேதி இந்தூரில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் படு மோசமாக தோல்வியடைந்தது. இதுகுறித்து கிரிக்கெட் வல்லுநர்களும் கடுமையாக விமர்சித்து இருந்தனர். குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “இந்திய வீரர்கள் எப்படியும் நாம்தான் வெற்றி பெறுவோம் என்ற அதிக மிதப்புடன் ஆடியதைத் தெளிவாக பார்த்தேன். அந்த நினைப்புடன் இருந்தால் என்ன முடிவு கிடைக்கும் என தற்போது புரிந்திருக்கும். எனவே தவறுகளை சரிசெய்து கொள்ளுங்கள்” என விமர்சித்து இருந்தார்.

இதற்கு இந்திய டெஸ்ட் அணி கேப்டன் ரோகித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர், "இரண்டு டெஸ்ட் போட்டியை வென்றால் வெளியே இருப்பவர்கள் நாங்கள் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று நினைத்துக் கொள்வார்கள். இந்த பேச்சை, குப்பையில்தான் போட வேண்டும். நாங்கள் எப்போதும் அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவே நினைக்கிறோம். வெறும் இரண்டு போட்டியில் வெற்றி பெற்றுவிட்டு அனைத்தையும் நிறுத்திக் கொள்ள யோசிப்பதில்லை. அணியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் சிலர் நாங்கள் அதிக நம்பிக்கையுடன் இருப்பதாக கூறி வருகிறார்கள்.

நாங்கள் ஒவ்வொரு போட்டிக்கு முன்பு என்ன பேசிக் கொள்கிறோம் என்று உங்களுக்கு தெரியுமா? கடுமையாக விளையாட வேண்டும் என்ற ஒரு வார்த்தை மட்டுமே மனதுக்கு வருகிறது. நம்முடைய எதிரணிக்கு கொஞ்சம்கூட இடம் கொடுக்கக்கூடாது என யோசிக்கிறோம். நாம் வெளிநாட்டில் சென்று விளையாடும்போது எதிரணி வீரர்களும் அப்படித்தான் நம்மை எதிர்கொள்வார்கள். அதைத்தான் நாங்களும் செய்ய விரும்புகிறோம். நாங்கள் அதிக நம்பிக்கையுடன் அலட்சியமாக இருப்பதாக வெளியே இருக்கும் நபர்கள் நினைக்கிறார்கள் என்றால் அதற்கு எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

ரவி சாஸ்திரி ஏற்கனவே இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார். அவருக்கு வீரர்கள் எப்படி தயாராவோம், என்ன பேசிக்கொள்வோம் என அனைத்தும் தெரியும். ஆனால் அப்படி இருந்தும் அவர் இப்படி பேசியது ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் அலட்சியமாகவும் அதிக நம்பிக்கையுடனும் இருக்கவில்லை. நாங்கள் இப்போதும் கடுமையாகத்தான் எதிர் அணியை கையாளுகிறோம்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com