தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 273 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி புனேவில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ரோகித் ஷர்மா 14 (35) ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மயாங்க் அகர்வால் சதம் அடித்து அசத்தினார். இதற்கிடையே வந்த புஜாரா 58 (112) ரன்களில் விக்கெட்டை இழக்க, மயாங்க் 108 (195) ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து கேப்டன் கோலி மற்றும் ரஹானே ஜோடி சேர்ந்தனர். விராட் கோலி அரை சதத்தை கடக்க, மறுபுறம் ரஹானே ஆமை போல் பேட்டிங் செய்தார். முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி 63 (105) ரன்களுடனும், ரஹானே 18 (70) ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென்னாப்ரிக்க அணியில் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.