இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஹெட்மையரின் சதத்தால் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடர் இப்போது நடந்து வருகிறது.
பிரிட்ஜ்டவுனில் நடந்த முதலாவது போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி, 360 ரன் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 129 பந்தில் 12 சிக்சர், 3 பவுண்டரியுடன் 135 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இது அவருக்கு 24-வது சதம். பின்னர் 361 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, 48.4 ஓவரில் 364 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜேசன் ராய் (85 பந்தில் 123 ரன்) ஜோ ரூட் (102 ரன்) அபார சதம் அடித்தனர்.
இந்நிலையில் இரண்டாவது ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட் செய்தது. கடந்த போட்டியில் சதம் அடித்த, கிறிஸ் கெய்ல் 63 பந்துகளில் அரை சதம் அடித்த நிலையில் அடில் ரஷித் பந்தில் ஆட்டமிழந்தார். ஹெட்மையர் அபார சதம் அடித்தார். அவர் 83 பந்தில் 104 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 50 ஓவர் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 289 ரன் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய் (2 ரன்), பேர்ஸ்டோவ் (0) ஏமாற்றம் அளித்தனர். பிறகு வந்த ரூட் 36 பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கேப்டன் மோர்கனும் பென் ஸ்டோக்ஸும் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். ஆனால் முறையே, 70, 79 ரன்களில் இருவரும் ஆட்டமிழந்ததும் அடுத்து வந்தவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை.
அந்த அணி 47.4 ஓவர்களில் 263 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் 26 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷெல்டன் கோட்ரல் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட் வீழ்த்தினார். ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட் வீழ்த்தினார். சதம் அடித்த ஹெட்மையர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.