முழங்கால் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை செய்த பின்னும் பிரச்னை தொடர்ந்ததால் 2 வது முறையாக ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது’ என்று கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா. கடந்த சில வருடங்களாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருக்கும் அவர், உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனாக இருக்கும் அவரை ’சின்ன தல’ என்று அழைக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களாக, இடது முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர், 4 முதல் 6 வாரங்கள் ஒய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தனது அறுவை சிகிச்சை குறித்து ரெய்னா விளக்கம் அளித்துள்ளார்.
‘’ அறுவைச் சிகிச்சை முடிந்து குணமாகிவருகிறேன். மருத்துவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் விரைவில் குணமடைய வாழ்த்திய நண்பர்களுக்கும் நன்றி. முழங்கால் பிரச்னை 2007 ஆம் ஆண்டு தொடங்கியது. அப்போது அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். பிறகு தொடர்ந்து கிரிக்கெட் விளையாடினேன். கடந்த சில வருடங்களாக மீண்டும் பிரச்னை. கடுமை யான வலி. பயிற்சியாளர்கள் எனக்கு அதற்கான உதவிகளை செய்தாலும் பிரச்னை முடியவில்லை. இதனால் இரண்டாவது முறையாக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இது கடினமான ஒன்று. சிகிச்சைக்குப் பின் சில மாதங் கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்பது தெரியும். இருந்தாலும் மீண்டும் வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்’’ என்று தெரிவித்துள்ளார்.