ராஞ்சியில் உள்ள மகேந்திர சிங் தோனியின் பண்ணைக்கு அதிக சத்துக்கள் நிறைந்த, விலை அதிகமுள்ள கடக்நாத் இனத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் வாங்கப்பட்டுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் கோரிக்கையின் பேரில், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பண்ணைக்கு, புரதம் நிறைந்த புகழ்பெற்ற ‘கடக்நாத்’ இனத்தைச் சேர்ந்த 2,000 கோழிக்குஞ்சுகளை அனுப்பியுள்ளதாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கூட்டுறவு நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பு கடக்நாத் கோழி இறைச்சி புவியியல் குறியீடு (GI) குறிச்சொல்லைப் பெற்றது. கடக்நாத் கோழிகளில் முட்டைகளில் புரதம் அதிகளவு நிறைந்துள்ளது. அதன் இறைச்சியும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
இந்த கோழி, அதன் முட்டை மற்றும் அதன் இறைச்சி மற்ற இனங்களை விட அதிக விலைக்கு விற்கப்படுகிறது. உள்ளூர் கூட்டுறவு நிறுவனத்தில் இருந்து தோனி ஆர்டர் செய்த 2,000 ‘கடக்நாத்’ குஞ்சுகள் தோனியின் சொந்த ஊரான ராஞ்சிக்கு அனுப்பப்பட்டதாக ஜாபுவா கலெக்டர் சோமேஷ் மிஸ்ரா தெரிவித்தார். “தோனி போன்ற பிரபலமான ஆளுமை கடக்நாத் கோழி வகைகளில் ஆர்வம் காட்டுவது வரவேற்கத்தக்க நடவடிக்கை. இந்த குஞ்சுகளை எவரும் ஆன்லைன் முறையில் ஆர்டர் செய்யலாம், இது மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு பயனளிக்கும், ”என்று மிஸ்ரா கூறினார்.