காஷ்மீரில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் தொடர் ஒன்றில் 2.5 கிலோ கொண்ட மீன் ஒன்று ஆட்டநாயகன் விருதாக வழங்கப்பட்டது.
காஷ்மீரில் உள்ள மைதானம் ஒன்றில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றிருக்கிறது. அந்த மைதானம் மோசமான நிலையில் இருந்ததால், அங்கு கிரிக்கெட் வீரர்கள் விளையாடுவதில் பெரும் சிரமம் இருந்தது. இதனால் அந்த கிரிக்கெட் மைதானத்தை சீரமைக்க நினைத்த உள்ளூர் கிரிக்கெட் குழுவினர், தங்களிடம் இருந்த சொந்தப் பணத்தை செலவழித்து தயார் செய்துள்ளனர். இன்னும் அங்கு பல வேலைகள் இருப்பதால் அந்த மைதானத்தை தயார் செய்ய நிதியுதவியை எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில் அங்கு நடந்த கிரிக்கெட் போட்டியை பிரபலப்படுத்தி, அதன்மூலம் மைதானத்தின் மீது கவனத்தை திருப்ப அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் பெரிய அளவு மீன்களை வாங்கி, அதை போட்டியில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு ஆட்டநாயகன் விருதாக கொடுத்திருக்கின்றனர். இந்த நிகழ்வு உள்ளூர் வாசிகளின் கவனத்தை ஈர்த்தது. இந்த காட்சியை காஷ்மீரை சேர்ந்த செய்தியாளர் ஒருவர் தனது ட்விட்டரில் பகிர, அதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
கிரிக்கெட் உலகில் எத்தனையோ ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டிருக்கும் நிலையில், மீன் என்பது யாரும் கண்டிராத ஒன்றாக திகழ்கிறது. 2017ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த தொடர் ஒன்றில் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு மினி வேன் ஒன்று ஆட்டநாயகன் விருதாக வழங்கப்பட்டது. தாகா பிரிமியர் லீக் போட்டியில் இங்கிலாந்தை சேர்ந்த அறிமுக வீரர் ஒருவருக்கு கலவை மிஷின் கொடுக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு இங்கிலாந்து வீரர் இயான் மார்கன் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சன் சைன் எனும் நிறுவனத்தின் ஸ்நாக்ஸை ஆட்டநாயகன் விருதாக பெற்றிருக்கிறார்.