32 வருடங்களுக்குப் பிறகு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற மிக இளமையான வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் அரை இறுதி சுற்றில் நான்காம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 26-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாஃபோவை எதிர்த்து விளையாடினார். 4 மணி நேரம் 19 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 19 வயதான கார்லோஸ் அல்கராஸ் 6-7 (6-8), 6-3, 6-1, 6-7 (5-7), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதன்மூலம், 32 வருடங்களுக்குப் பிறகு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற மிக இளமையான வீரர் என்ற பெருமையையும் கார்லோஸ் (19 வயது) பெற்றார். இதற்குமுன்னர் கடந்த 1990இல் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு பீட் சாம்ப்ராஸ் என்ற 19 வயதான அமெரிக்க வீரர் நுழைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய நேரப்படி திங்கள் கிழமை அதிகாலை 1.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், நார்வேயின் காஸ்பர் ரூட் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இறுதிப் போட்டியில் பட்டம் வெல்பவர்கள் சாம்பியன் கோப்பையுடன் உலக டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதலிடத்தையும் கைப்பற்றுவார்கள்.
இதையும் படிக்க: அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற போலந்து வீராங்கனை