இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில், 15 வயதே நிரம்பிய சச்சின் டெண்டுல்கரின் ரசிகை இடம்பிடித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க மகளிர் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி-20 போட்டிகளிலும் 3 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடுகிறது. முதலாவது டி-20 போட்டி வரும் 24- ஆம் தேதி சூரத்தில் நடக்கிறது. ஒரு நாள் தொடர் அக்டோபர் 9- ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
ஒரு நாள் அணிக்கு கேப்டனாக மிதாலிராஜ் நீடிக்கிறார். டி20 கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்று விட்டதால், 15 வயதான இளம் வீராங்கனை, ஹரியானாவைச் சேர்ந்த ஷபாலி வர்மா அணியில் இடம் பிடித்துள்ளார். மே மாதம் நடந்த மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் சிறப்பாக ஆடியதாலும் ஜெய்ப்பூரில் புதன்கிழமை நடந்த டி20 போட்டியில் விளாசியதாலும் அவருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் நாகலாந்துக்கு எதிரான போட்டியில், 56 பந்தில் 128 ரன்கள் விளாசி சாதனை படைத்திருந்தார் ஷபாலி. அப்போதே அவர் ஆட்டத்தின் மீது தேர்வாளர்களின் பார்வை பதிந்தது. ஷபாலி அளித்த பேட்டி ஒன்றில், ’’சச்சின் டெண்டுல்கர்தான் எனக்கு பிடித்த வீரர். அவர்தான் என் ரோல் மாடலும் கூட’’ என்று கூறியிருந்தார்.
அணி விவரம்:,
ஒரு நாள் போட்டிக்கான அணி: மிதாலிராஜ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் (துணை கேப்டன்), பூனம் ரவுத், ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, தானியா பாட்டியா, ஜூலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, மன்சி ஜோஷி, எக்தா பிஷ்ட், பூனம் யாதவ், ஹேமலதா, ராஜேஸ்வரி கெய்க்வாட், பிரியா பூனியா.
முதல் 3 டி 20 போட்டிக்கான இந்திய அணி:
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), மந்தனா (துணை கேப்டன்), ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, தானியா பாட்டியா, பூனம் யாதவ், ஷிகா பாண்டே, அருந்ததி ரெட்டி, பூஜா வஸ்ட்ராகர், ராதா யாதவ், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஹர்லீன் டியோல், அனுஜா பட்டில், ஷபாலி வர்மா, மன்சி ஜோஷி.