தோனியை போல் கடைசி 2 பந்துகளில் சிக்சர் விளாசி அணியை வெற்றி பெற வைத்த திவாட்டியாவின் வீடியோ வைரலாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன் குவித்தது. இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றி பெற கடைசி இரண்டு பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற பரபரப்பான கட்டத்துக்கு ஆட்டம் சென்றது. கடைசி 2 பந்துகளையும் எதிர்கொண்ட ராகுல் திவாட்டியா 2 பந்துகளையும் சிக்சருக்கு விளாசி அணியை வெற்றி பெற செய்தார். இக்கட்டான சூழ்நிலையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய திவாட்டியாவை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் திவாட்டியாவின் நேற்றைய ஆட்டத்தை எம்எஸ் தோனியின் சாதனையுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதாவது, கடந்த 2016 ஆம் ஆண்டு புனே அணிக்காக எம்எஸ் தோனி விளையாடிய போது, பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அக்சர் பட்டேல் வீசிய ஓவரில் தோனி கடைசி 2 பந்தில் 2 சிக்சர் விளாசி வெற்றிப் பெறச் செய்தார். தற்போது அதனை திவாட்டியாவும் செய்துள்ளதால் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிக்க: 'The Iceman' - மேட்ச்சை வென்றது திவேதியாவின் சிக்சர்கள் அல்ல; அவரின் சமயோஜிதம்