வேகப்பந்துவீச்சுக்கு பெயர் போன பாகிஸ்தான் அணியில், வரலாற்றின் திருப்புமுனையாக இங்கிலாந்துக்கு எதிரான அறிமுகப்போட்டியிலேயே பாகிஸ்தான் அணியின் ஸ்பின்னர் அப்ரார் அகமது 11 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்குபெற்று விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பல சாதனைகளை குவித்து 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றதை தொடர்ந்து, இரண்டாவது போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
அறிமுக போட்டியில் இங்கிலாந்தை சிதறடித்த அப்ரார்!
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானின் 24 வயதான லெக் ஸ்பின்னர் அப்ரார் முகமது அறிமுகம் செய்யப்பட்டார். முதல் இன்னிங்க்ஸ் தொடங்கிய நிலையில் போட்டியில் வேகப்பந்துவீச்சுக்கு எதிராக முதல் போட்டியை போன்றே ஆதிக்கம் செலுத்தினர் இங்கிலாந்து அணியின் ஓபனர்கள். அதனால் விரைவாகவே அப்ரார் முகமதுவை களமிறக்கினார் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம். பந்துவீசிய முதல் ஓவரிலேயே 4ஆவது பந்தில் அப்ரார் அகமதின் கேரம் டெலிவிரி கூக்ளியை கணிக்க முடியாத இங்கிலாந்து அணியின் ஓபனர் கிராலி பவுல்டாகி வெளியேறினார். பின்னர் அடுத்தடுத்து களத்தில் நிலைத்து நின்ற டக்கெட் மற்றும் ஒல்லி போப்பை வெளியேற்றிய அப்ரார், டெஸ்ட் பார்மேட்டின் சிறந்த பேட்ஸ்மேனான ஜோ ரூட்டை லெக் பை விக்கெட்டில் வெளியேற்றினார்.
10 விக்கெட்டுகளை கைப்பற்றும் முனைப்பில் இருந்தவரை ஏமாற்றிய ஷகித் மஹ்மூத்!
அப்ரார் அகமதின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத இங்கிலாந்து தொடர்ச்சியாக விக்கெட்டை இழந்து தடுமாறியது. இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் கணிக்க முடியாத பந்தால் பவுல்டாக்கி வெளியேற்றிய அப்ரார் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
பின்னர் அடுத்திருக்கும் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உலக சாதனை படைப்பார் என்று நினைத்த போது, மறுபக்கம் பந்துவீசிய ஷகித் மஹ்மூத் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை கைப்பற்ற அனைவரது எதிர்பார்ப்பும் கலைந்தது. பின்னர் இறுதி 1 விக்கெட்டையும் மஹ்முத்தே தட்டிச்சென்றார்.
அறிமுக போட்டியின் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் எடுத்த 2ஆவது வீரர்!
7 விக்கெட்டுகளை கைப்பற்றிய அப்ரார் முகமது, அறிமுகப்போட்டியிலேயே 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய பாகிஸ்தான் அணியின் இரண்டாவது பவுலர் என்ற பெருமையை தக்கவைத்து கொண்டார். முதல் இடத்தில் அறிமுக போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது நஷிர் இருக்கிறார்.
அறிமுக போட்டியில் 11 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பாகிஸ்தான் வீரர்!
இரண்டாவது இன்னிங்க்ஸிலும் சிறப்பாக பந்துவீசிய அப்ரார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். முதல் இன்னிங்ஸ் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ் என இரண்டையும் சேர்த்து மொத்தம் 11 விக்கெட்டுகளை கைப்பற்றிய அப்ரார், அறிமுக போட்டியில் இதுவரை எந்த ஒரு பாகிஸ்தான் வீரரும் நிகழ்த்தாத விக்கெட் வேட்டையை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதுவரை அறிமுக போட்டியில் 7 விக்கெட்டை எடுத்ததே ஒரு பாகிஸ்தான் அணி வீரரின் சாதனையாக இருந்தது. அதனை உடைத்துஇந்த புதிய சாதனையை படைத்திருக்கிறார் அப்ரார்.
டெஸ்ட் போட்டிகளை பொறுத்த வரையில் உலக அரங்கில் அறிமுகப்போட்டியில் அதிக விக்கெட்டுகள் என்பது 16 விக்கெட்டுகள் என்ற நிலையில் உள்ளது, அடுத்த இடங்களில் 12 மற்றும் 11 விக்கெட்டுகள் உள்ளன. அந்த வரிசையில் அப்ரார் அகமதும் இணைந்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு இன்னும் 157 ரன் தேவை!
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 281 ரன்களும், பாகிஸ்தான் 202 ரன்களும் எடுத்தனர். பின்னர், இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 275 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து, 355 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் விளையாடி வருகிறது. மூன்றாம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னும் 157 ரன்கள் பாகிஸ்தானுக்கு தேவை. கைவசம் 6 விக்கெட் மீதமுள்ளது.