’குழந்தைகள் விளையாடியதை போல ஆடியதால் தென்னாப்பிரிக்க அணியுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தோற்றோம்’ என்று இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா கூறினார்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டியில் தோல்வி கண்ட தென்னாப்பிரிக்க அணி, இப்போது 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வென்ற நிலையில் இரண்டாவது ஒரு நாள் போட்டி, தம்புல்லாவில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி, 8 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் டிக்வெல்லா (69 ரன்), கேப்டன் மேத்யூஸ் (79 ரன்) அரைசதம் அடித்தனர். தென்னாப்பிரிக்க தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் நிகிடி, பெலக்வாயோ தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 42.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. டி காக் 87 ரன்களும் கேப் டன் டுபிளிசிஸ் 49 ரன்களும், அம்லா 43 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
போட்டிக்குப் பின் பேசிய இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா, ’குழந்தைகள் விளையாடியதை போல இன்றைய போட் டியில் விளையாடிவிட்டோம். எங்களுடைய ஃபீல்டிங் அப்படித்தான் இருந்தது. போட்டி முழுவதும் நாங்கள் தவறு செய்துகொண்டே இருந் தோம். வெற்றி பெற வேண்டுமானால் அதிகத் தவறுகள் செய்யக் கூடாது. ஒரு போட்டியில் இரண்டு மூன்று தவறுகள் அறியாமல் செய்யலாம். தொடர்ந்து அதையே செய்துகொண்டிருந்தால் எப்படி வெல்ல முடியும்? கடந்த சில போட்டிகளில் நான் சரியாக ஆடவில்லை என்றாலும் எனது டெக்னிக்கை இப்போது மாற்றத் தொடங்கியுள்ளேன்’ என்றார்.