மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபிடம் வீழ்ந்தது. மும்பை பேட்டிங்கின்போது நடந்த இரு ரன் அவுட்கள் ஆட்டத்தையே தலைகீழாக்கி விட்டது என்று அந்த அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா தெரிவித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது மும்பை இந்தியன்ஸ். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. 199 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 32 ரன்களில் முக்கிய இரண்டு விக்கெட்களை பறிகொடுத்தது. ரோகித் ஷர்மா 28 ரன்களிலும், இசான் கிஷன் 3 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து அதிர்ச்சி அளித்தனர். 3ஆவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த இளம் வீரர்கள் டெவால் பிரேவிஸ், திலக் வர்மா அதிரடியாக விளையாடி சற்று நம்பிக்கை அளித்தனர்.
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா, சூர்யாகுமாரின் தவறால் 36 ரன்களில் ரன் அவுட்டானார். அதனைத் தொடர்ந்து வந்த பொல்லார்டும் 10 ரன்களில், சூர்யாகுமாரின் தவறால் ரன்அவுட்டாக, மும்பை அணிக்கு நெருக்கடி மேலும் அதிகரித்தது. முடிவில் மும்பை அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்து, 12 ரன்கள் வித்தியாசத்தில் நடப்புத் தொடரில் தொடர்ந்து 5ஆவது தோல்வியை சந்தித்தது. தோல்விக்கு பின் பேட்டியளித்த ரோகித் ஷர்மா சூர்யகுமார் தவறால் வீழ்ந்த 2 விக்கெட்டுகள் குறித்து பேசினார்.
“நாங்கள் நன்றாக விளையாடினோம் என்று நினைத்தோம். ஆட்டத்தை வெல்வதற்கு மிக அருகில் வந்தோம். அந்த இரு ரன்-அவுட்கள் எங்கள் வெற்றிக்கு உதவவில்லை. வித்தியாசமான சிந்தனை செயல்முறையுடன் விளையாட முயற்சிக்கிறோம், ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை. நாங்கள் நன்றாக கிரிக்கெட் விளையாடவில்லை, சில சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு அதன்படி செயல்பட வேண்டும். எங்கள் பந்துவீச்சாளர்கள் அழுத்தத்தில் இருந்தனர். ஆனால் ஆடுகளம் பேட்டிங் செய்ய நன்றாக இருந்தது. நான் 198 எட்டக்கூடிய இலக்கு என்று நினைத்தேன். நான் முன்பே சொன்னது போல், நாங்கள் மீண்டும் டிராயிங் ரூமுக்குச் சென்று நன்றாகத் தயாராகி வர வேண்டும்.” என்று கூறினார்.
மும்பை தோல்வி குறித்து பேசிய சேவாக், “திலிப் வர்மாவின் ரன் அவுட் ஆட்டத்தை மாற்றியது. அதில் சூர்யகுமார் விளையாட்டில் அழுத்தத்தில் இருந்திருக்கலாம். அதனால் அந்த ரன் அவுட் நிகழ்ந்தது. ஆனால் பொல்லார்ட் ரன்அவுட்டுக்கு சூர்யகுமார் செய்த தவறே காரணம். பிரேவிஸ் மற்றும் வர்மா சிறந்த வீரர்கள். ஆனால், அவர்கள் நிலையாக இருக்க வேண்டும் மற்றும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் மற்றும் மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து தங்கள் பலவீனங்களை சமாளிக்க வேண்டும்.” என்று கூறினார்