2011 உலகக்கோப்பை பைனலில் தோனியின் சிக்சரை மட்டும்தான் நினைவில் வைத்திருக்கிறார்கள், ஆனால் வெற்றிக்கு முக்கியமான ஒருவரை கொண்டாட மக்கள் தவறவிட்டுவிட்டனர் என கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர்.
2011 உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பாகவே இருபெரும் பலம் வாய்ந்த அணிகளாகவும், இந்த அணிகள் தான் இறுதிப்போட்டிக்குள் நுழையும் என்று கணிக்கப்பட்ட அணிகளாகவும் இருந்தது என்றால் அது இந்தியா மற்றும் இலங்கை அணிகள் தான். இரண்டு அணிகளிலும் ஜாம்பவான்கள் மற்றும் நட்சத்திர வீரர்கள் குவிந்திருந்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி போட்டியில், மும்பை வான்கடே மைதானத்தில் 2011 உலகக் கோப்பையை 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 28 வருடங்களுக்கு பிறகு தனது தீராத தாகத்தை தீர்த்துக்கொண்டது இந்தியா.
பல வீரர்களுக்கு அது மறக்கமுடியாத ஆண்டாக மாறியது மட்டுமில்லாமல் அதுதான், அவர்களின் கடைசி உலகக்கோப்பையாகவும் இருந்தது. கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை படைத்து, 100 சர்வதேச சதங்கள் என்ற இமாலய ரெக்கார்டை வைத்திருந்த சச்சின் டெண்டுல்கருக்கு, உலகக்கோப்பை என்ற ஒன்று கிடைக்கவே கிடைக்காதா என்ற ஏக்கத்தில் இருந்து மீட்டு, தன்னை கிரிக்கெட்டின் கடவுள் கைகளில் சென்று சேர்ந்து ஆரத்தழுவிக்கொண்டது 2011 உலகக்கோப்பை.
2011 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இருவரது ஆட்டங்கள் மட்டுமே பெரிதாக பேசப்பட்டது. ”அது இந்திய அணி விரைவாகவே இருபெரும் ஜாம்பவான்களான சச்சின் மற்றும் சேவாக் விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறிய போது, நிலைத்து நின்று விளையாடி போட்டியை இறுதிவரை எடுத்து வந்த கவுதம் காம்பீரின் 97 ரன்கள் ஆட்டம், மற்றும் அழுத்தமான சூழலில் தன்னை முன்னிலை படுத்திகொண்டு களத்தில் இறங்கி இறுதிவரை போட்டியை கைகளில் தாங்கி, வெற்றிக்கான ரன்களை சிக்சராக மாற்றிய தோனியின் 91 ரன்கள் ஆட்டம்” என இரண்டை மட்டும் தான் கொண்டாடி தீர்த்தனர் இந்திய ரசிகர்கள்.
இந்நிலையில் தற்போது 2011 உலகக்கோப்பை குறித்து பேசியிருக்கும் கவுதம் காம்பீர், “ ரசிகர்கள் தோனியின் கடைசி சிக்சர் மற்றும் என்னுடைய 97 ரன்களை மட்டும் தான் நினைவில் வைத்திருக்கிறார்கள், ஆனால் வெற்றிக்கான பாதையை அமைத்து கொடுத்தவர் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான், அவரை கொண்டாட மறந்துவிட்டார்கள்” என்று கூறியுள்ளார்.
2011 உலகக்கோப்பை இறுதிபோட்டியில் சிறப்பாக விளையாடிய மஹீலா ஜெயவர்தனே, இறுதிவரை ஆட்டமிழக்காமல் 88 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து, இலங்கை அணியை 50 ஓவர்களில் 274/6 ரன்களுக்கு எடுத்துச்சென்றார். மென் இன் ப்ளூ தரப்பில் ஜாகீர் கான் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
277 ரன்களை சேஸ் செய்த இந்திய அணி 31 ரன்களிலேயே வீரேந்திர சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை இழந்தது. இருப்பினும், கவுதம் கம்பீர் (97), எம்எஸ் தோனி (91 நாட் அவுட்), விராட் கோலி (35), யுவராஜ் சிங் (21 நாட் அவுட்) ஆகியோர் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவை இரண்டாவது உலகக் கோப்பை கோப்பைக்கு அழைத்துச் சென்றனர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக தோனி தெரிவானார், தொடர் நாயகனாக யுவராஜ் சிங் தெரிவானார். இந்தியாவுக்கு சாதகமாக ஆட்டத்தை முடித்து வைக்க தோனி அடித்த சிக்சர் இன்னும் ரசிகர்களால் நினைவில் வைத்து கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவின் வெற்றியில் ஜாகீர் முக்கிய பங்கு வகித்ததாக கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
முதல் 5 ஓவரில்- 3 ஓவர்கள் மெய்டன் & 1 விக்கெட்!
அழுத்தமிக்க 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பந்துவீசிய இந்திய அணிக்கு சிறப்பானதொரு தொடக்கத்தை அமைத்து கொடுத்தார் ஷகீர் கான். போட்டியின் தொடக்கத்திலேயே ஓப்பனர் தரங்காவை 2 ரன்களுக்கு வெளியேற்றி, இலங்கை அணியை பின்னுக்கு தள்ளினார் ஷகீர். அதுமட்டுமில்லாம் முதல் பேஸில் 5 ஓவர்களை வீசிய ஜாகீர் கான் அதில் 3 ஓவர்களை மெய்டன் ஓவர்களாக வீசி, வெறும் 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். இறுதிப்போட்டியில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
மேலும் இந்தியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கான், 2011 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில், ஒன்பது போட்டிகளில் விளையாடி 21விக்கெட்டுகளை 18.76 சராசரியில் எடுத்து, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராக கோப்பையை முடித்திருந்தார்.
இங்கிலாந்துக்கு எதிராக முக்கியமான நேரத்தில் போட்டியை மாற்றிய ஜாகீர் கான்!
2011 உலகக் கோப்பையில் ஜாகீர் கானின், சிறந்த பந்துவீச்சு குரூப் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக இருந்தது. இரு அணிகளுக்கிடையில் டையில் முடிவடைந்த புகழ்பெற்ற ஆட்டத்தில், ஜாஹீரின் பந்துவீச்சு புள்ளிவிவரங்கள் 3/64.
மிக முக்கியமாக, இந்தியாவின் இலக்கான 339 ரன்களைத் துரத்தும்போது, இங்கிலாந்து அணியின் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் மற்றும் இயன் பெல் ஆகியோரின் பிரமாதமான 170 ரன் பார்ட்னர்ஷிப்பின் உதவியால், இங்கிலாந்து 42ஆவது ஓவரில் 281-2 ரன்களுக்கு போட்டியை வெல்லும் நிலையிலேயே இருந்தது.
ஆனால் அப்போது எம்.எஸ். தோனி ஜாஹீரை மீண்டும் தாக்குதலுக்கு கொண்டு வந்தார். பந்துவீசிய ஜாகீர் கான், ஒரு மிகவும் சிறப்பான யார்க்கரை வீசி பெல்லை கிளீன் செய்து பெவிலியன் திருப்பினார். மேலும் அதைத் தொடர்ந்து தனது அடுத்த ஓவரில் பால் காலிங்வுட்டின் விக்கெட்டை கைப்பற்றி இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளினார் ஜாகீர்.
வெற்றிபெரும் நிலையில் இருந்த இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்தி அந்த போட்டியை டிராவிற்கு கொண்டு சென்றார் ஜாகீர். அந்த போட்டியில் இந்தியாவின் சச்சின் 120 ரன்களும், இங்கிலாந்தின் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 158 ரன்களும் அடித்திருந்தனர்.