"சூப்பர் ஓவர் எங்களுக்கு ராசியில்லை"- நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்

"சூப்பர் ஓவர் எங்களுக்கு ராசியில்லை"- நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்
"சூப்பர் ஓவர் எங்களுக்கு ராசியில்லை"- நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்
Published on

எங்கள் அணிக்கு சூப்பர் ஓவர் ராசியானதாக அமைவதில்லை என்று நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி முதற்கட்டமாக நடைபெற்று வரும் டி20 தொடரில் அசத்தலாக விளையாடி வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற நம்பிக்கையுடனும், தொடரை கைப்பற்றும் முனைப்புடனும் ஹாமில்டனில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் களமிறங்கியது இந்திய அணி.

நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி பேட்டிங் செய்தது. முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பிய ரோகித் சர்மா இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினார். ஆனால், மற்ற இந்திய வீரர்கள் யாரும் சிறப்பாக விளையாடவில்லை. ரோகித் சர்மா 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், அடுத்ததாக கேப்டன் விராட் கோலி மட்டும் 27 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து, 180 ரன்கள் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. வில்லியம்சன் மிகச் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து 95 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவர் கடைசி பந்தில் 1 ரன் எடுக்க வேண்டிய சூழலில் டெய்லர் அவுட்டானார். இதனால் ஆட்டம் சமனில் முடிந்து, சூப்பர் ஓவருக்கு சென்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 17 ரன்கள் எடுத்தது. 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா களமிறங்கியது. இதில் ரோகித் சர்மா கடைசி 2 பந்துகளில் சிக்ஸர் அடித்து இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

போட்டி முடிந்து பேட்டியளித்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் " எங்கள் அணிக்கு சூப்பா் ஓவா்கள் வெற்றிகரமாக அமைவதில்லை. வழக்கமான ஆட்ட நேரத்திலேயே நாங்கள் வென்றிருக்க வேண்டும். ஆட்டம் சமனில் முடிந்தது. சிறப்பான ஆட்டமாக அமைந்த இந்தப் போட்டியில் இந்தியா மீண்டும் தனது அனுபவத்தை நிரூபித்தது. நாங்கள் சிறப்பாக பந்துவீசினோம். சிறப்பாக ஆடியும் வெற்றியை தவற விட்டது, அதிருப்தியாக உள்ளது. வெற்றி இலக்கை அடைய முடியாதது வேதனை தருகிறது. ஆக்லாந்தில் நடைபெற்ற இரண்டு போட்டிகளை விட ஹாமில்டனில் நாங்கள் சிறப்பாகவே விளையாடினோம்" என்றார் அவர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com