இந்தியாவின் வலது கை பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் நிலையில், சஞ்சு சாம்சன் அனைத்து வாய்ப்புகளையும் பெற வேண்டும் என ஆதரவு குரல் எழுப்பி உள்ளார் இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
கடந்த 20211 ஐபிஎல் போட்டிகளில் 140 ஸ்டிரைக் ரேட்டில் 458 ரன்கள் குவித்திருந்தாலும், அவரை விட குறைவான ரன்களே அடித்திருந்த ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவருக்கும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அணிக்குள் எடுத்தாலும் பெஞ்ச் பிளேயராகவே இருந்து வருகிறார் சஞ்சு சாம்சன்.
இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றிருந்தாலும் 3 போட்டியிலும அவர் பயன்படுத்தப்படவே இல்லை. இதனால் டdவிட்டர் மற்றும் இதர சமூக வலைதளங்களில் சஞ்சு சாம்சனுக்கான ஆதரவு குரல்கள் அதிகரித்துக்கொண்டே இருந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது சஞ்சு சாம்சன் குறித்து பேசியிருக்கும் இந்தியாவின் நட்சத்திர ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின், சஞ்சு சாம்சன் நல்ல பார்மில் இருக்கும்போதே அவருக்கான வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.
பார்மில் இருக்கும்போதே சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும்
இதுகுறித்து பேசியிருக்கும் அஸ்வின், ”சஞ்சு சாம்சன் போன்ற திறமையான வீரர் விளையாடவில்லை என்றால், அவர் வெளிப்படையாக டிரெண்டாகி விடுவார். அவருக்கு எல்லா வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உண்மையில், தற்போது சிறப்பான பார்மில் அவர் விளையாடி வருவதால், அணியில் அவர் விளையாடுவதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கூறினார்.
மேலும் டி20 கேப்டன் ஹர்திக் பாண்டியா குறித்து பேசியிருக்கும் அஸ்வின், தோனி பாணியில் பாண்டியா செயல்படுகிறார், சஞ்சு சாம்சன் பிரச்சனையும் கூட சிறப்பாக கையாள்கிறார் என்றார்.
தோனியை போன்றே ஹர்திக் செயல்படுகிறார்
ஹர்திக் பாண்டியா பற்றி பேசிய அஸ்வின், ”சஞ்சு சாம்சன் ஏன் ஆடவில்லை என்ற கேள்விக்கு, அவர் சிறப்பான வீரர், ஆனால் நாங்கள் ஒரு கலவையான முயற்சியை கையாண்டதால் எங்களால் சாம்சனை ஆடவைக்க முடியவில்லை, தொடர்ந்து எல்லோருக்கும் வாய்ப்பு வழங்கப்படும், என்னுடைய அறைக்கதவுகள் எப்போதும் எல்லா வீரருக்கும் திறக்கப்பட்டு இருக்கும்” என்று ஹர்திக் பேசியது பார்ப்பதற்கு சிறப்பாக இருந்தது என்று கூறினார்.
மேலும் “ உண்மையில், ஹர்திக் தல தோனிக்கு மிக நெருக்கமானவர் என்பதை நம் அனைவருக்கும் தெரியும், தோனியிடம் இருந்து தான் நிறைய கற்றுக்கொண்டேன் என்று முன்பு கூறியிருந்தார், சமூக வலைதளங்களில் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு தந்திரமான கேள்வியை மிக அழகாக கையாண்டதற்கு அவருக்கு எனது பாராட்டுக்கள்” என்று பேசினார்.
இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், முதல் போட்டியில் நல்ல தொடக்கத்தை கொடுத்த சஞ்சு சாம்சன் 36 ரன்கள் சேர்த்தார்.