தனக்கு இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஓய்வு கொடுத்தால், தனது புதிய திட்டத்திற்கு தயாராக முடியும் என இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாளை நாக்பூரில் நடைபெறவுள்ளது. மதியம் 1.30 மணியளவில் தொடங்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்காக, இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. ஏற்கனவே நடந்து முடிந்த டி20 போட்டியில் தோல்வியடைந்துள்ளதால், ஒருநாள் போட்டியை கைப்பற்ற இந்திய அணி முனைப்பில் உள்ளது. அதேசமயம் முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததால், அதிலிருந்து மீள ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.
முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 236 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால், அந்த இலக்கை எட்டுவதற்கே இந்தியா சிரமப்பட்டுவிட்டது. இதற்கு காரணமாக இந்தியாவின் பேட்டிங்கில் ஏற்பட்டுள்ள தடுமாற்றமே எனக் கூறப்படுகிறது. அதேசமயம் அன்றைய தினம் ஆஸ்திரேலியா 280 ரன்களை கடந்திருந்தால், கண்டிப்பாக இந்தியா வெற்றி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கும். இதனால், தங்கள் அணியின் பேட்டிங் பலத்தை கூட்டி, அதன்மூலம் இந்தியாவை தோற்கடிக்க ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. அதற்காக, தங்கள் அணியில் ஷான் மார்ஸை சேர்க்க அந்த அணி திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், 2வது ஒருநாள் போட்டி தொடர்பாக பேசிய குல்தீப் யாதவ், “ஷான் மார்ஸ் எனது பந்தை சிறப்பாக விளையாடினார். நமது அணி எனக்கு 2 போட்டிகளில் ஓய்வு அளிக்க வேண்டும். அந்தக் காலத்தில் நான் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் பேட்டிங்கை கவனித்துக்கொள்வேன். குறிப்பாக, ஷான் மார்ஸ் எனது பந்தை சிறப்பாக விளையாடுவதுடன், விக்கெட்டை இழக்காமல் விளையாடக்கூடியவர். எனவே, நான் சில புதிய பந்துவீச்சு திட்டங்களை வகுத்துள்ளேன். அடுத்தமுறை நான் ஷான் மார்ஸுக்கு எதிராக பந்துவீசும்போது அதை நீங்கள் நேரடியாக பார்ப்பீர்கள்” எனத் தெரிவித்தார்.