தன்னை உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்ததால் ரிஷாப் பண்ட் கண்டிப்பாக சிறு வருத்தம் அடைந்திருப்பார் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பைகான இந்திய அணி கடந்த 15ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் தோனிக்கு மாற்று கீப்பராக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இளம் வீரரான ரிஷாப் பண்ட் தேர்வு செய்யப்படவில்லை. இது சில கேள்விகளையும், கருத்துக்களை எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக உலகக் கோப்பை இந்திய அணி தேர்வாளர்கள் சில விளக்கங்களையும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தான் உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக பேசிய தினேஷ் கார்த்திக், “அனைத்து புகழும் நிதாஹஷ் கோப்பை தொடரில் என்னை இறுதி பேட்ஸ்மேனாக களமிறக்கிய அபிஷேக் நாயரையே சேரும். அவர்தான் என்மீது நம்பிக்கை வைத்து அணியில் எனக்கு அந்த இடத்தை கொடுத்தார். நான் இறுதி பேட்ஸ்மேனாக களமிறங்குவது குறித்து எந்தத் திட்டமும் செய்யவில்லை. ஆனால் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்து, அதை இக்கட்டான நேரத்தில் செய்தேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “எப்போது நான் அல்லது பண்ட் யாரேனும் ஒருவர் அணியில் இருந்து நீக்கப்படுவோம். அது ஆட்டத்தின் இயல்பு. ஆனால் நாங்கள் அதுதொடர்பாக பேசிக்கொண்டதே இல்லை. பண்ட் அவரது வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தார். நான் எனது வாய்ப்பை எதிர்பார்த்திருந்தேன். ஒருவேளை பண்ட் தேர்வு செய்யப்பட்டிருந்தால் எனக்கு வருத்தம் இருந்திருக்கும். ஆனால் தற்போது நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன், எனவே கண்டிப்பாக பண்ட்-க்கு சிறிய வருத்தம் இருக்கும். தோனி உள்ள அணியில் நான் ஒரு முதலுதவி பெட்டியைப் போல தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன். அதில் எனக்கு மகிழ்ச்சி” என்று கூறினார்.