இந்தியாவின் ஸ்டார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், தனது அறுவை சிகிச்சைக்கு பின்னர் வெளியிட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் பதிவில், “எத்தனை முறை விழுந்தாலும் பரவாயில்லை, நான் எழுவேன்" என தெரிவித்திருக்கிறார்.
உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டிகளில் இருந்து விலகிய சில நாட்களுக்குப் பிறகு இந்தியாவின் ஸ்டார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்டுக்கு வலது முழங்கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 27 வயதான ஆசிய சாம்பியன் தொடக்கப் போட்டியில் கலந்து கொண்ட பின்னர் ஆகஸ்ட் 31 அன்று உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இருந்து விலகினார். அப்போது காயம் காரணமாக தான் வெளியேற்றப்படவில்லை என்றும், மயக்கத்தை மட்டுமே உணர்ந்ததாகவும் கூறினார்.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனை படுக்கையில் இருக்கும் தனது படத்துடன் வினேஷ் போகட் வெளியிட்டிருக்கும் பதிவில், "முழங்கை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது! நான் எத்தனை முறை விழுந்தாலும் பரவாயில்லை, இனியும் எழுந்திருப்பேன்" என்று தெரிவித்திருக்கிறார். டோக்கியோ ஒலிம்பிக்கில் காலிறுதி போட்டியுடன் வெளியேறி அதிர்ச்சியளித்தார் வினேஷ் போகட்.