சுப்மான் கில் அவுட் என அறிவிக்கப்பட்ட பந்தில் விக்கெட் கீப்பர் ஸ்டம்புகளுக்கு முன்னால் கையுறைகளை வைத்திருந்ததால் நோ பால் வழங்கப்படுவதாக நடுவர் அறிவித்தார்.
ஐபிஎல் 2022 தொடரில் பிராபோர்னில் இன்று நடக்கும் 43-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 170 குவித்தது. 171 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணியில் ஓப்பனர்களாக சஹாவும், சுப்மான் கில்லும் களமிறங்கினர்.
ஓவருக்கு 8 ரன்களுக்கு இணையாக இந்த கூட்டணி ரன்களை விளாசியதால் ஆர்சிபி அணி திணறத் துவங்கியது. சஹாவை ஹசரங்கா அவுட்டாக்கி வெளியேற்ற, சாய் சுதர்சனுடன் ஜோடி சேர்ந்தார் கில். ஷபாஷ் அகபது வீசிய 8 வது ஓவரில் பவுண்டரி விளாசிய கில், அடுத்து அவுட்டாகும் வாய்ப்பில் இருந்து தப்பினார். கில்லுக்கு சபாஷ் வீசிய பந்து “வைடு” பால் போலச் சென்று விக்கெட் கீப்பர் ராவத்திடம் தஞ்சம் புகுந்தது. பேட்டில் பட்டது உறுதியாக தெரியாததால் அரைமனதுடன் அம்பயரிடம் முறையிட்டார் ராவத். களத்தில் இருந்த அம்பயர் வீரேந்தர் ஷர்மா விரல்களை உயர்த்தி “அவுட்” கொடுக்க சும்பான் கில் அதிர்ச்சி அடைந்தார்.
மூன்றாவது அம்பயரிடம் சுப்மான் கில் முறையிட அவர்கள் அல்ட்ரா எட்ஜ் முறையில் ஆய்வு செய்ததில் பந்து பேட்டில் படவில்லை என்பது உறுதியானது. சுப்மான் கில் அவுட் இல்லை என்ற அறிவிப்புடன் ஒரு போனஸ் அறிவிப்பும் வந்தது. அந்த பந்தை நோ பாலாக அறிவித்தார் மூன்றாவது நடுவர். விக்கெட் கீப்பர் ஸ்டம்புகளுக்கு முன்னால் கையுறைகளை வைத்திருந்ததால் நோ பால் வழங்கப்படுவதாக அவர் அறிவித்தார்.
கிடைத்த இந்த போனஸ் வாய்ப்பை அடுத்த பந்தில் சிக்ஸராக்கினார் சுப்மான் கில். ஆனால் அவருக்கு கிடைத்த இந்த “லக்” வெகுநேரம் நீடிக்கவில்லை! அடுத்து சபாஷ் வீசிய பந்தில் எல்.பி.டபுள்யூ ஆகி நடையைக் கட்டினார் கில். தற்போது 18 ஓவர்கள் முடிவில் 150 ரன்களை எடுத்து குஜராத் அணி விளையாடி வருகிறது.