ஐபிஎல்லை அதிவேகத்தால் அதிர வைக்கும் “ஜம்மு எக்ஸ்பிரஸ்”

ஐபிஎல்லை அதிவேகத்தால் அதிர வைக்கும் “ஜம்மு எக்ஸ்பிரஸ்”
ஐபிஎல்லை அதிவேகத்தால் அதிர வைக்கும் “ஜம்மு எக்ஸ்பிரஸ்”
Published on

இந்தியாவின் அதிவேகப்பந்து வீச்சாளராக பரிமளித்து வருகிறார் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த உம்ரான் மாலிக். நடப்பு ஐபிஎல் தொடரில் அவரது அனல் வேகப்பந்து வீச்சு, கிரிக்கெட் வல்லுநர்களை புருவம் உயர்த்தச் செய்திருக்கிறது.

2018-ஆம் ஆண்டு. 19 வயதுக்குப்பட்ட அணிக்கான தேர்வுக்குழுவினர் ஜம்மு காஷ்மீர் செல்கின்றனர். அங்குள்ள வைஷ்ணவ தேவி கோயிலில் வழிபட்டு திரும்புகையில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அடலேறை காண்கின்றனர். அவரது மின்னல் வேகப்பந்து வீச்சு தேர்வுக்குழுவினரின் கண்களை அகல விரியச் செய்கிறது. உம்ரான் மாலிக் அடையாளம் காணப்படுகிறார்.

குஜ்ஜார் நகர் பகுதியில் பழ வியாபாரியான அப்துல் ரஷீதின் மகனான உம்ரன் மலிக்கிற்கு கூச் பெஹார் கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. அதுவரை டென்னிஸ் பந்து வீரராக இருந்த உம்ரான் மாலிக் உள்ளூர் பயிற்சியாளர் ரந்தீர் சிங் மன்ஹாஸ், மூத்த வீரர் ராம் தயாள் ஆகியோரால் பட்டை தீட்டப்படுகிறார். இந்திய வீரர் இர்பான் பதானின் ஆலோசனையும் உம்ரன் மலிக்கின் திறமையை மெருகேற்றுகிறது.

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ள அப்துல் சமது, உம்ரான் மாலிக்கின் நெருங்கிய நண்பர். இந்த நட்பு உம்ரான் மாலிக்கை ஹைதராபாத் அணியின் வட்டத்துக்குள் கொண்டு வரக் காரணமாக அமைகிறது. 2020-ஆம் ஆண்டு வலைப்பயிற்சிக்கான பந்துவீச்சாளராக அவரைப் பயன்படுத்துகிறது ஹைதராபாத் அணி. அடுத்த ஆண்டும் வலைப் பந்துவீச்சாளராகவே இருந்த உம்ரான் மாலிக்கிற்கு அந்த சீசனில் ஆச்சர்யமளிக்கும் வகையில் அணியில் இடம்பெற வாய்ப்பு கிடைக்கிறது. நடராஜன் கொரோனா காரணமாக தொடரிலிருந்து விலக சன்ரைசர்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறத் தவறுகிறது.

இதனால் வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக இருந்த உம்ரான் மாலிக் அணியில் இடம்பெறுகிறார். வாய்ப்பு கிடைக்கப்பெற்ற முதல் போட்டியின் முதல் ஓவரிலேயே 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசி தனது வரவை பிரகடனப்படுத்தினார் உம்ரன். நடப்பு ஐபிஎல் தொடரிலும் உம்ரான் மாலிக்கின் அனல் வேகப்பந்து வீச்சு, சில வேளைகளில் எதிரணி பேட்ஸ்மேன்களை குலைநடுங்க வைக்கிறது. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரின் விக்கெட்டை அவர் வீழ்த்திய விதம் பாராட்டைப் பெற்றது. பஞ்சாப் அணிக்கு எதிராக வீசிய கடைசி ஓவரில் ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரமிக்க வைத்தார் உம்ரான்.

நேற்று மதியம் போட்டி நடைபெற்றதால் ஆடுகளம் மிகவும் சூடாக இருந்தது. ஆனால் தொடர்ந்து அதிவேகமாக பந்துவீசிய உம்ரானின் வேகத்தில் அது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. இன்னிங்ஸ் இடைவேளையில், உம்ரானிடம் ஐபிஎல் வர்ணனையாளர்கள் சூடான வெயிலில் பந்துவீசுவது கடினமாக இருக்கிறதா என்று கேட்டனர். அதற்கு உம்ரான் “நான் ஜம்முவில் இருந்து வருகிறேன், அங்கு கோடையில் 46 முதல் 47 டிகிரி வெப்பநிலை இருக்கும். நான் ஜம்முவில் பயிற்சி பெற்றேன் மற்றும் அங்குள்ள வெப்பத்தைப் பயன்படுத்தினேன். நான் உண்மையில் வெப்பத்தில் பந்துவீசுவதையே விரும்புகிறேன்” என்று கூறினார். இந்த ஜம்மு எக்ஸ்பிரஸ் இந்திய அணியில் இடம்பெறும் நாள் தூரத்திலில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com